Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்

-

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு - சசிகலா இரங்கல்..

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை இன்றைக்கு தொடங்கியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த அவல நிலைக்கு திமுக தலைமையிலான அரசே முழு பொறுப்பேற்கவேண்டும். திமுக தலைமையிலான அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்ததன் விளைவாக, இன்றைக்கு தமிழக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு தமிழக மக்களுக்கு இடைவிடாமல் துன்பத்தை கொடுத்து, அவர்களது நிம்மதியை அழித்து, தொடர்ந்து மக்களை கசக்கி பிழியும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை என்றும், மேலும், சுமார் 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும், இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்றைக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம், அகவிலைப்படி உயர்வை முழுமையாக வழங்குவோம் என்றெல்லாம் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இவற்றை எதையும் திமுக தலைமையிலான அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

sasikala

திமுக தலைமையிலான அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதன் காரணமாக இன்றைக்கு தமிழகத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை வளாகங்களில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பணிமனைகளில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பேருந்து இல்லாமல் நீண்ட நேரம் காத்து இருப்பதால் பேருந்து நிலையங்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தமிழக மக்கள் எந்தவித சிரமங்களும் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். ஆனால், இன்றைக்கு திமுக தலைமையிலான அரசுக்கு மக்களைப்பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை. இவ்வாறு, பொங்கல் பண்டிகை காலத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க அரசு பேருந்துகள் கிடைக்கவில்லை என்றால், தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். இது ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமையை அளித்துவிடும். மேலும், பண்டிகை காலம் நெருங்கிய நேரத்தில், திமுக தலைமையிலான அரசு, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்துவதால், திமுகவினருக்கு இதில் ஏதேனும் ஆதாயம் உள்ளதோ? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வெளியூர்களில் பணியாற்றுகின்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர் சென்று தங்கள் குடும்பத்தினரோடு பண்டிகையை கொண்டாட நினைத்து, அரசு பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் இன்றைக்கு பேருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து கொண்டு போக்குவரத்து ஊழியர்களை முன்னதாக அழைத்து பேசி ஒரு சுமூக தீர்வு கண்டிருக்கவேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டு இன்றைக்கு மக்கள் படும் சிரமங்களை வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எங்கே இருக்கிறார்? என்றே தெரியவில்லை. திமுகவினருக்கு இப்போது உள்ள ஒரே கவலை அவர்கள் தலைவரின் நூற்றாண்டு விழாவை எப்படி நடத்துவது? இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களை எப்படி கொண்டு சேர்ப்பது? மக்கள் வந்தாலும், வராவிட்டாலும் காலி சேர்களை போட்டாவது விழாக்களை நடத்திவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் திமுகவினர் செயல்பட்டுக்கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

திமுக தலைமையிலான அரசு பேருந்துகளை இயக்குவதற்காக தற்போது தற்காலிக தொழிலாளர்களை கொண்டு ஒரு சில இடங்களில் அரசு பேருந்துகளை இயக்குவது ஒரு நிரந்தர தீர்வாகாது. இது போக்குவரத்து ஊழியர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் செயல். இது மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும். அதாவது, நெல்லை மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது தற்காலிக ஓட்டுநரை பயன்படுத்தி நகரப் பேருந்து இயக்கப்பட்டபோது, நகர பேருந்து விபத்துக்குள்ளாகி பின்புற கண்ணாடி உடைந்து மீண்டும் தாமிரபரணி பணிமனைக்கு பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.தமிழக மக்கள் வீதியில் நிற்கும் அவலங்களை வேடிக்கை பார்க்கும் திமுக தலைமையிலான அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திமுக தலைமையிலான அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை விட்டுவிட்டு அவர்களை உடனே அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். தமிழகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் மேலாக அரசு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதால், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ