ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது..


நவம்பர் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:
சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 27ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே. முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூடுவதுடன், அவற்றின் கட்டிடங்களை இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் அனுமதியின்றிச் செயல்படும் ரிசார்ட்டுகளால் வனப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வனப்பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்டுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கவும், உரிய அனுமதியின்றி இயங்கும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் : கிருஷ்ணகிரியில் 5 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட்..!
