யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிங்கமுத்து யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ,5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.