தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (24.05.2024) 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024 இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும். தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
24.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 25.05.2024 முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.