Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை - ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

-

வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 2 வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும், மரங்கள் விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளை மாலை வரை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து, அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை நேற்று உதகைக்கு வரவழைக்கப்பட்டது. மேலும் மாவட்ட தீயணைப்பு துறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதகையில் கனமழையின்போது மீட்பு பணியில் ஈடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.மேலும் இதுபோன்று வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

விக்ரமை தொடர்ந்து வயநாடு மீட்பு பணிக்கு நிதி வழங்கிய பிரபல நடிகர்கள்!

கனமழையால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகை உபகரணங்களுடன் 500 பேரை கொண்டு 42 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக 1077 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். இரவு நேரங்களிலும் பேரிடர்களை கண்காணிக்கும் பணியில் அனைத்து துறையினரும் ஈடுபட்டு வருவதாகவும் முகாம்களில் தங்க விரும்பும் பொது மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறினார்

கனமழை பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரே நேரில் கேட்டறிந்து வருவதாக கூறிய அவர், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை ஆய்வு செய்ய இந்த வாரத்தில் இந்திய புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர் குழு வர உள்ளதாக தெரிவித்தார். அந்த குழு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை ஆய்வுசெய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கும் என்றும், அதன் பிறகு நிலச்சரிவு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் பாதுகப்பிற்கான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது கூடலூர் அருகே ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய ஒருவர் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

MUST READ