ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? – திருமாவளவன்
தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது நீட் விவகாரத்தில் ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
உயிரிழந்த ஜெகதீஸ்வரன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்பி திருமாவளவன், “நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அங்கீகரித்திருந்தால், ஜெகதீஸ்வரன் மருத்துவர் ஆகி இருப்பார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் பிடிவாத குணம் இதன் பிறகாவது மாறுமா? இனியாவது ஆளுநர் மனம் இறங்க வேண்டும். தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது நீட் விவகாரத்தில் ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? தனது மகனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என செல்வசேகர் இரவு, பகலாக உழைத்துள்ளார். தந்தையின் நிலையை எண்ணி மகன் ஜெகதீஸ்வரன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார். ஒரே குடும்பத்தை தந்தை, மகனை பலி வாங்குவதாக நீட் தேர்வு இருக்கிறது. நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி தந்திருந்தால் ஜெகதீஸ்வரன் மருத்துவம் படித்திருப்பார். நீட் விலக்கு மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்பதே ஜெகதீஸ்வரன் தந்தையின் கடைசி ஆசை” என்றார்.