தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:


தனியார்மயமாக்கல் முடிவுக்குக் கண்டனம்
தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கும் சுமார் 2,500 டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்கவும், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் வசூல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய சட்டவிரோத விற்பனை போன்ற தொடர் புகார்களுக்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் இந்த முடிவு சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்தாது; மாறாக அதை மேலும் அதிகரிக்கவே செய்யும். இது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி
ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 710 மதுபானக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடுவதே அரசின் நடவடிக்கையாக இருக்க வேண்டும். மாறாக, கடைகளைத் தனியார் வசம் ஒப்படைத்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என டி.டி.வி. தினகரன் எச்சரித்துள்ளார்.
அரசின் உடனடி நடவடிக்கை என்ன?
எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே அரசு மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். மேலும், தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப மதுபானக் கடைகளைப் படிப்படியாக மூடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
