நாகப்பட்டினத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக நிர்வாகிகள் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் வழக்குகளைச் சுட்டிக்காட்டி, போதைப்பொருள் நடமாட்டத்தையும் அதில் தொடர்புடையவர்கள் மீதான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியா இல்லை Narcos கூடாரமா?
“கட்சியா இல்லை Narcos கூடாரமா?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், தவெகவைச் சுற்றியுள்ள போதைப்பொருள் தொடர்பான விவகாரங்கள் அதிகரித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்குவதாகக் குறிப்பிட்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
“Druglords”, “Cartel Mafia” போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தவெக மீது விமர்சனம் முன்வைத்துள்ள உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாகை போதைப்பொருள் பறிமுதல் விவகாரம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியையும் முதலமைச்சரையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகள் குறித்தும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் நீடித்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் மேலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது! பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை
