தமிழக அரசியல் களம் பல அதிரடி திருப்பங்களால் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு புதிய சட்ட நெருக்கடி உருவாகியுள்ளது.


திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் வழக்கு, விஜய் அவர்களை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தவெக ஆலோசகர்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வழக்குகளும் வழக்கமான இழுத்தடிப்புகளும்: உடைந்த பாரம்பரியம்!
தமிழ்நாட்டில் தேர்தல் வழக்குகள் என்றாலே அவை ஆண்டுகள் கணக்கில் இழுத்தடிக்கப்படும் என்பதுதான் இதுவரை காலமும் நிலவி வந்த வரலாறு. உதாரணமாக, கடந்த 2011 ஆம் ஆண்டு சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு பல ஆண்டுகள் கழித்தே உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இதனால் பல அரசியல் தலைவர்கள் தேர்தல் வழக்குகளை மிகவும் சாதாரணமாகவும், சாதாரண சிவில் வழக்குகள் போல எளிதாகக் கையாண்டு கடந்துவிடலாம் என்று நம்புகின்றனர்.
ஆனால், இம்முறை விஜய் அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அவர்கள் மிகவும் நேர்மையான மற்றும் கடுமையான நீதிபதியாக அறியப்படுபவர். வழக்கின் தொடக்கத்திலேயே அவர், “இந்த வழக்கைப் பிற சாதாரண தேர்தல் வழக்குகள் போல நினைத்துக் கொள்ளாதீர்கள்; கால இழுத்தடிப்புகளை இங்கு அனுமதிக்க முடியாது.
ஆறு மாத காலத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடித்தே தீருவேன்” என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு தவெக வட்டாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
50,000 அபராத எச்சரிக்கையும் ஆலோசகர்களின் மெத்தனமும்!
நீதிமன்றம் விதித்த கடுமையான காலக்கெடுவுக்குப் பிறகும், விஜய் மற்றும் அவருடன் தேர்தல் வழக்கைச் சந்திக்கும் தரப்பினர் முறையான பதில் மனுவைத் (Counter-Affidavit) தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியடைந்த நீதிபதி, “அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது முறையான பதில் மனுவைத் தாக்கல் செய்யாவிட்டால், தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். விஜய் அவர்களின் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் இந்த வழக்கை அவரது சட்ட ஆலோசகர்களும், நெருங்கிய வட்டத்தில் உள்ள நிர்வாகிகளும் எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு இந்த அபராத எச்சரிக்கையே சான்றாகும்.
திருச்சி கிழக்கு தொகுதி வழக்குத்தானே என்ற தவறான கணக்கீடு!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியைத் தனது வசம் வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டார். இதனால், “நாம் ஏற்கனவே ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கான தேர்தல் வழக்குத்தானே, இதில் என்ன பெரிய ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்ற தவறான கணக்கீட்டில் தவெக ஆலோசகர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், சட்டம் வேறு விதமாகப் பேசுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி முறைகேடு நடைபெற்றது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவர் அத்தொகுதியை ராஜினாமா செய்திருந்தாலும் கூட, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார். இது தவெகவின் எதிர்காலத்திற்குப் பெரும் அடியாக அமையும்.
வழக்கில் உள்ள வலுவான வீடியோ ஆதாரங்கள்!
விஜய் அவர்களின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மிக வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, குழந்தைகளை எவ்விதத் தேர்தல் பிரச்சாரங்களிலோ அல்லது அரசியல் விளம்பரங்களிலோ பயன்படுத்தக் கூடாது என்பது மிக முக்கியமான விதியாகும்.
ஆனால், பிரச்சாரத்தின் போது குழந்தைகளைத் திரட்டி, அவர்களுக்குத் தவெக கொடிகளையும் சின்னங்களையும் வழங்கி, விசிலடிக்க வைத்துப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதற்கான தெளிவான வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களைச் சட்டப்பூர்வமாக எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமிடல் இல்லாமல் தவெக தரப்பு தடுமாறி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
கோட்டையை விட்டுவிட்டு நிர்வாகப் பணிகளில் குறியிருக்கும் ஆலோசகர்கள்!
விஜய் அவர்களின் அரசியல் எதிர்காலமே நீதிமன்றத்தின் கைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான வேளையிலும், அவரது ஆலோசகர்கள் தங்களது சொந்தப் பதவிகளையும் அதிகாரங்களையும் தக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்குவது போன்ற அகப்பக்க வேலைகளிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ள இந்தக் கூட்டத்தினர், கட்சியின் அடிப்படைப் பலத்தையே உலுக்கும் இந்த எலக்சன் பெட்டிஷனை முற்றிலுமாகக் கோட்டை விட்டிருப்பது தொண்டர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
“தனது அரசியல் எதிர்காலத்தையே முடக்கிப் போடக்கூடிய ஆறு ஆண்டு கால தகுதி நீக்க ஆபத்து கண்முன்னே நிற்கும் வேளையிலும், சுயநல ஆலோசகர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு விஜய் இன்னும் அமைதி காப்பது ஏன்? அடைக்காக்கும் முட்டை உடையப் போகிறது என்பதை தவெக தலைமை எப்போது உணரப் போகிறது?” என்பதே தற்போது அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.
