தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பிரதமர் பதவியைக் குறிவைப்பது மற்றும் அண்டை மாநிலங்களில் தவெக காலூன்ற முயல்வது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு அரசியல் கணக்குகளை விரிவாகப் பேசியுள்ளார்.
பிரதமர் கனவு: கற்பனை கோட்டையா?
விஜய் பிரதமர் தகுதிக்கு நிகரானவர் என்றும், தென் மாநிலங்களில் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறி அவர் பிரதமர் பதவியைக் குறிவைப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய தராசு ஷ்யாம், அரசியலில் கற்பனை கோட்டைகள் கட்டுவது இயல்பு என்றும், ஆனால் அது நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டார். தொகுதி மறுசீரமைப்புக்கு (Delimitation) பிறகு தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும் பட்சத்தில், தவெக தனது கூட்டணியை மெயின்டேன் செய்ய தேசிய மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் தவெக அதிகபட்சமாக 35 எம்பி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். 35 தொகுதிகளை வைத்துக்கொண்டு மத்தியில் ஆட்சி அமைக்கவோ அல்லது பிரதமர் பதவியைப் பிடிக்கவோ முடியாது.

அண்டை மாநில அரசியல் சிக்கல்களும் தேசியக் கட்சிகளின் எதிர்வினையும்
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தவெக வேட்பாளர்களைக் களமிறக்க முயற்சித்தால், அது தவெக கூட்டணிக்கும் அப்பகுதிகளிலுள்ள தேசியக் கட்சிகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகளை உருவாக்கும்.
கேரளா: கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே பிரதான சக்திகளாக உள்ளன. தவெக அங்கு போட்டியிட முற்பட்டால், உள்ளூர் வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அங்குள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் தவெக-விற்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கர்நாடகா & காவிரி நீர் பிரச்சனை: கர்நாடகாவில் கட்சி அமைப்பதைத் தாண்டி, காவிரி நீர் விவகாரத்தில் அம்மாநிலத்தைக் கண்டித்துத் தெளிவான குரல் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். மாநில உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்சிகளால் மட்டுமே தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
ஜோதிடக் கணக்குகளும் ஜெயலலிதா, கேசிஆர் உதாரணங்களும்
விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரின் வழிகாட்டுதலிலேயே இயங்குவதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், இதே போன்ற ஜோதிடக் கணக்குகள் 2014-இல் ஜெயலலிதாவிற்கும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவுக்கும் (KCR) கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். ஜெயலலிதாவைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய முயற்சியும் பலனளிக்கவில்லை. அதேபோல் கேசிஆர் தனது கட்சியின் பெயரைப் பிஆர்எஸ் என மாற்றி தேசிய அரசியலில் இறங்கப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஜோதிட ரீதியான வழிகாட்டுதல்கள் அரசியல் களம் மற்றும் தேர்தல் யதார்த்தத்திற்கு முன் வேலை செய்யாது என அவர் தெரிவித்தார்.
தேசிய அரசியலும் பாஜாக சதியும்?
பாஜக திட்டமிட்டு தவெக-வை மூன்றாவது அணியாகக் கட்டமைத்து காங்கிரஸைப் பலவீனப்படுத்த முயல்கிறது என்ற கருத்துகளைத் தராசு ஷ்யாம் மறுத்தார். எந்தவொரு தேசியக் கட்சியும் மற்றொரு மாநிலக் கட்சியைத் தேவையின்றி வளர்த்துவிடாது. விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் அவரிடம் அளவுக்கு அதிகமான கற்பனைகளையும் ஆசைகளையும் வளர்த்து விடுகிறார்கள். அரசியலில் ‘அடைய துடித்தல், அடைந்து விடுதல், அடைந்ததைத் தக்க வைத்துக் கொள்ளுதல்’ ஆகிய மூன்று சூத்திரங்களே முக்கியம். தவெக முதலில் மாநிலத்தில் தனது ஆட்சியை அல்லது அதிகாரத்தைச் சீராகத் தக்கவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; அதற்குள்ளாகவே அகில இந்திய அரசியல் மற்றும் பிரதமர் பதவி எனக் கனவு காண்பது பகல்கனவே என்று தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளாா்.
தம்பி ஆதவ் அர்ஜுன் இன்னைக்கு இல்லை – சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் சுவாரசிய பேச்சு!
