அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘கிராண்ட் செஸ் டூர் 2026’ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக காளை
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்ற ‘கிராண்ட் செஸ் டூர் 2026’ தொடர் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் ‘கிராண்ட் செஸ் டூர்’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வாழ்த்துச் செய்தி
பிரக்ஞானந்தாவின் இந்த வரலாற்று வெற்றி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றி இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகளவில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கிராண்ட் செஸ் டூர்: பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா
