தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா (மாதர் பதுருதீன்) முஸ்லிம்கள் குறித்துப் பேசிய பேச்சு, அதனால் அவையில் ஏற்பட்ட அமளி, சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியல் மற்றும் மதுரை சுற்றுவட்டாரத் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜூனியர் பிரியன் விரிவாகப் பேசியுள்ளார்.
சட்டமன்றத்தில் முஸ்தபா பேசியதன் பின்னணி
“மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா சட்டமன்றத்தில் கடந்த காலத்தில் திமுக முஸ்லிம்கள் குறித்துப் பேசிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, அந்த வடு இன்னமும் இருப்பதாகப் பேசியது அவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. சபாநாயகரால் நீக்கப்பட்ட அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அவர் விவாதத்தைக் கிளப்பியது, திமுக முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிம்பத்தை உருவாக்கவும், திமுகவிடமிருக்கும் முஸ்லிம் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்குமான தவெகவின் உத்தியாகும்” என்று தெரிவித்தார்.

மேலும், “தவெகவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை இணைப்பது மற்றும் சிறுபான்மையினரை ஈர்ப்பது போன்ற பணிகளை அவர் செய்து வருகிறார். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கொள்கை மற்றும் கொள்கை ரீதியான பாதுகாப்பில் (Policy level protection) மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால் தவெக சட்டமன்ற உறுப்பினர் பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு எனப் பிரதிநிதித்துவத்தை அதிகமாக வழங்கியதால் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தவெக பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம் விவகாரமும் மதுரையில் திமுகவின் தோல்வியும்
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதிகளில் திமுக சந்தித்த தோல்வி குறித்துப் பேசிய ஜூனியர் பிரியன், அதற்குப் பின்னால் இருந்த வலதுசாரி இந்து அமைப்புகளின் ரகசியப் பிரச்சாரத்தைச் சுட்டிக்காட்டினார். “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் கடும் அழுத்தம் கொடுத்தபோதிலும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் திமுக அரசு உறுதியான ஸ்டாண்ட் (Stand) எடுத்தது. ஆனால், அந்த முடிவிற்காகத் திமுக செலுத்திய விலைதான் மதுரையில் அடைந்த தேர்தல் தோல்வி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு நடந்துகொண்ட விதத்தால் ஆத்திரமடைந்த வலதுசாரி இந்து அமைப்புகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகள், கடைசி நேரத்தில் மதுரை சுற்றுவட்டாரத்தில் ஒரு ரகசியப் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. ‘நமது வாக்குகள் பாஜக, அதிமுக எனப் பிரிந்தால் மீண்டும் திமுகவே வெற்றி பெற்றுவிடும்; எனவே, திமுகவைப் பழிவாங்கவும் தோற்கடிக்கவும் ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளையும் தவெக வேட்பாளர்களுக்குப் போடுங்கள்’ என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதன் காரணமாகவே பாஜக அல்லது அதிமுகவுக்குச் செல்ல வேண்டிய வலதுசாரி இந்துக்களின் வாக்குகள் மொத்தமாகத் தவெகவுக்குச் சென்று, மதுரையில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை உருவானது” என்று பிரியன் விரிவாக விளக்கியுள்ளார்.
