தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27-08-2026) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
இன்றைய விவாதத்தின் போது, திமுக ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலிட்டுப் பேசினர். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவிக்கவே, தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டது.

அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி பேச்சு
இந்த காரசார விவாதத்தைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “திமுக எம்.எல்.ஏக்கள் பட்டியலின மக்களுக்கு அதைச் செய்தோம், இதைச் செய்தோம் எனச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினோம் என்று பெருமையைப் பேசுகிறீர்கள். அப்படியென்றால், இத்தனை ஆண்டுகளாக ஒரு தலித் உறுப்பினரை ஏன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ஆக்கவே இல்லை? இதுதான் நீங்கள் சொல்லும் சமூக நீதியா? உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்திருக்கிறார்கள், ஆனால் ஏன் ஒருவரைக் கூடப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கவில்லை?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
“பிச்சை போட வேண்டிய அவசியமில்லை”
தொடர்ந்து பேசிய அமைச்சர், “பட்டியலின மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களைப் பட்டியலிடுவது அரசின் கடமை. அதை விட்டுவிட்டு ‘நாங்கள் தான் செய்தோம், நாங்கள் தான் தந்தோம்’ என்று சொல்லி, எங்களை எப்போதுமே பிறரிடம் பெற்று வாழும் நிலையில் தாழ்த்திப் பார்க்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் செயல்படுவது ஒவ்வொரு அரசின் கடமையாகும். உங்கள் கட்சியைச் சேர்ந்த எத்தனையோ மூத்த உறுப்பினர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்று பேசியதை யாராவது மறக்க முடியுமா? இங்கு யாரும் யாருக்கும் பிச்சை போட வேண்டிய அவசியமில்லை. பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் சட்டபூர்வமாகக் கொடுத்த உரிமையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்து வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது அம்பேத்கர் நமக்கு எழுதி வைத்த சட்டம். அதைச் சரியாகச் செய்து முடிப்பது அரசின் கடமையே தவிர, சலுகை அல்ல” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார். அமைச்சர் ராஜ்மோகனின் இந்த அதிரடி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பையும் சூடான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
