தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அத்துறை அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி அவையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்து அமைச்சர் வன்னி அரசு பேசினார்.

பரிதாபத்தின் அடிப்படையில்தான் பார்க்கிறீர்கள்
அமைச்சரின் பதிலுரையின் போது, “திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் பேசும்போது, தங்களது ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிட மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்கள் குறித்தும், பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியது குறித்தும் குறிப்பிட்டார்கள். இதனை நீங்கள் கோட்பாட்டு அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பச்சாதாபம் மற்றும் பரிதாபத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா? உண்மையிலேயே நீங்கள் பச்சாதாபம், பரிதாபம் என்ற அடிப்படையில்தான் தலித்துகளையும் ஆதிதிராவிடர்களையும் பார்க்கிறீர்கள்” என்று கூறினார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் உடனடியாக கடும் எதிர்ப்பு தெரிவித்துச் முழக்கமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
அவையில் ஒலித்த ‘ஆட்சியில் பங்கு’ குரல்
எதிர்ப்புகளுக்கு இடையே தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்? ஒரு தலித் பேசுவதை வழக்கம்போல் தடுக்கப் பார்க்கிறீர்களா? என்னை முழுமையாகப் பேச அனுமதியுங்கள். இந்த அவையில் என்னுடைய குரல் ஒலிக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த முறை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது கூட அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உண்மையிலேயே கோட்பாட்டு அடிப்படையில் செயல்பட்டிருந்தால் அப்போதே வாய்ப்பளித்திருக்க வேண்டும்.
ஆனால், இன்றைக்கு நாங்கள் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதுதான் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற உண்மையான கோட்பாடு. கடந்த காலத்தில் நீங்கள் பச்சாதாபத்தின் அடிப்படையில்தான் அணுகினீர்கள். அமைச்சரவைக்கு வந்த பிறகு ‘சோஃபா மாடல்’ என்றெல்லாம் குறியீடுகள் பேசப்படுகின்றன.
நான் தென்னகத்தில் நடந்த சாதி மோதல்களால் பாதிக்கப்பட்டு சென்னைக்கு வந்தவன். எங்களது தலைவர் திருமாவளவன் ஒரு குழந்தையைப் பள்ளியில் கொண்டு வந்து விடுவது போல என்னை இந்தச் சட்டமன்றப் பேரவையில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஒரு தலித் நல்ல வெள்ளைச் சட்டை போட்டாலோ அல்லது புதிய கார் வாங்கி வந்தாலோ ‘இவனுக்கு வந்த வாழ்வைப் பார்’ எனச் சாதியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் சூழலே நிலவுகிறது” எனத் தொடர்ந்து பேசினார். அமைச்சர் வன்னி அரசுவின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் கடுமையான கூச்சலும் குழப்பமும் நிலவிப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா? – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
