சண்டை… சண்டை… சண்டை… எப்போது பார்த்தாலும் சண்டைதான் நடக்கிறது! இது என்ன சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா?” என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேரவை நிகழ்வுகள் குறித்துக் கடுமையான ஆவேசத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நிலவி வரும் அமளி மற்றும் காரசாரமான மோதல்கள் குறித்துப் பேசுகையில் இவ்வாறு சாடினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா பேசியதாவது:
பரீட்சைக்குக் கூட மாணவர்கள் இப்படிப் படித்திருக்க மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேரவையில் எழுப்புவதற்காக இரவு பகலாகத் தரவுகளைத் திரட்டி, தீவிரமாகத் தயாராகிவிட்டு இங்கே வந்து பார்த்தால், எப்போது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கிறது!
இதையெல்லாம் செய்வதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? நானும் இத்தனை நாட்களாகப் பொறுமையா இருந்து பார்த்துவிட்டேன்… சட்டமன்றத்தின் நேரமும் மக்கள் வரியும் இப்படி வீணடிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அரசியல் மோதல்களுக்கே பேரவை நேரம் செலவிடப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், பேரவை ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தவெக ஆட்சியில் பேரவை கூடும்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் வெடித்து வரும் சூழலில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த ஆவேசப் பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
