மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்விகளை எழுப்பினார். இதற்காக பின்னர் அவர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தமும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் மிரட்டப்பட்டதாகவும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இந்த் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கோவை பா.ஜ.க. நிர்வாகி சதீஷ் இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அன்னபூர்ணா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மததிய நிதியமைச்சர் உடனான அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் சந்திப்பு குறித்த
வீடியோ சமூக ஊடகங்களில் கவனக்குறைவாக பகிரப்பட்டதாகவும், இது பல தவறான புரிதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியான விவகாரத்திற்காக பா.ஜ.க. மாநில தலைமை மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அதோடு, வீடியோவை எடுத்தவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அன்னபூர்ணா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ளவும், கடந்து செல்லவும் தாங்கள் விரும்புவதாகவும் அன்னபூர்ணா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.