தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக இன்று பதவியேற்றார்.
பதவியேற்பு விழா
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (லோக் பவன்) இன்று நண்பகல் 12 மணியளவில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ராஜேந்திர அர்லேகருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநர்கள் இடமாற்றம்
மத்திய அரசு கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேற்கொண்ட ஆளுநர்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:
ஆர்.என். ரவி: தமிழகத்தில் சுமார் 4.5 ஆண்டுகள் (54 மாதங்கள்) பணியாற்றிய இவர், தற்போது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (மார்ச் 11) அவர் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
ராஜேந்திர அர்லேகர்: கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் இவர், நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படும் வரை தமிழகத்தின் பணிகளையும் கூடுதலாகக் கவனிப்பார்.
ராஜேந்திர அர்லேகர் பற்றி…
கோவாவைச் சேர்ந்த இவர், அங்கு 2012 முதல் 2015 வரை அங்கு சபாநாயகராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
முன்னதாக 2021 முதல் 2023 வரை இமாச்சலப் பிரதேசத்தின் 21வது கவர்னராகவும், 2023 -2025-ல் பீகாரின் 42-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
2025 இல் இருந்து தற்போது வரை கேரள மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
