உக்ரைனின் ஒடேசா (Odesa) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள இந்திய அரசு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து நேரில் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
வணிகக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவில் நேற்று நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச வணிகக் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இந்த கொடூரத் தாக்குதலில் கப்பலில் பணியிலிருந்த 4 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷ்யப் போருக்கு இடையே, சர்வதேச கடல்வழிப் பாதையில் பயணிக்கும் பொதுமக்களின் வணிகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஏற்க முடியாது’: வெளியுறவு அமைச்சகத்தின் முதல் அறிக்கை
இச்சம்பவம் குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “பொதுமக்களின் வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீதான இத்தகைய தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச கடல்சார் விதிகளைப் பின்பற்றி மாலுமிகளின் பாதுகாப்பை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது.

ரஷ்ய தூதருக்கு நேரில் ‘ரெட் கார்டு’: டெல்லியில் எதிரொலித்த கொந்தளிப்பு
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, ராஜதந்திர ரீதியிலான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையை இந்தியா இன்று முன்னெடுத்துள்ளது. புதுடெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தூதரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று நேரில் நேரில் ஆஜராகுமாறு அழைத்தது. 4 இந்திய மாலுமிகளின் உயிரிழப்பிற்குத் தனது ஆழந்த இரங்கலையும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குத் தனது மிகக் கடுமையான எதிர்ப்பையும் இந்திய அரசு தூதரிடம் நேரடியாகப் பதிவு செய்தது.
சர்வதேச அளவில் தொடரும் பதற்றம்
உக்ரைன் போர்க் களத்தில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் ஏற்கனவே நிலவி வரும் சூழலில், வணிகக் கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
