பசிபிக் பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பம் – ஐரோப்பிய நாடுகளையே உலுக்கும் தீவிர பருவநிலை மாற்றம்.
உலக அளவில் அதிகரித்து வரும் ‘குளோபல் வார்மிங்’ (Global Warming) மற்றும் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) விளைவுகளால், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வரலாறு காணாத பெரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தமிழன் எச்சரித்துள்ளார்.

எல் நினோ மற்றும் வரலாற்றுப் பின்னணி
”எல் நினோ என்பது புதிய நிகழ்வு அல்ல; பல நூறு ஆண்டுகளாகவே 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரக்கூடிய ஒன்று. 1800-களில் ஏற்பட்ட கடுமையான எல் நினோ பஞ்சத்தின் காரணமாகவே, தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் பலர் பிழைப்பிற்காக இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றனர். அந்தத் தாது பஞ்சத்தின் பாதிப்புகளால்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நீர்நிலைகள் உருவாயின.”
பசிபிக் பெருங்கடலும் பருவநிலை மாற்றமும்
”உலகிலேயே மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பம் வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, தென் துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. மனிதர்களின் எல்லைமீறிய பிளாஸ்டிக் பயன்பாடு, எரிபொருள் புகைக் கழிவுகள் போன்றவற்றால் புவி வெப்பமயமாதல் மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாகவே, வழக்கமாக ஜூன் 1-இல் தொடங்கும் கேரளப் பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப் போனது. மே, ஜூன் மாதங்களில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி கொளுத்தியது.”
அக்டோபர், நவம்பரில் சென்னைக்கு ஆபத்து
”வழக்கமாகப் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை மிகக் குறைவாகவே பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட பலமடங்கு தீவிரமான ‘சூப்பர் எல் நினோ’ மழையும் புயலும் எதிர்பார்க்கப்படுகிறது. 2015-இல் சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தைப் போல, வரும் தீபாவளி மற்றும் குளிர்காலப் பருவமழைக் காலத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி வடிகால் பணிகளை விரைந்து மேற்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.”
ஐரோப்பிய நாடுகளை உலுக்கும் வெயில்
”இயல்பாகவே மிகுந்த குளிர்ப்பிரதேசங்களான ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் ஏசி வசதிகள் இல்லாத அந்த நாட்டு மக்கள், தீவிர வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசிகளை வாங்கக் கடைகளில் அடித்து பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது” என்று உமாபதி விவரித்தார்.
