தென் கொரியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரும், பிரபல வீடியோ கேமிங் நிறுவனமான ‘ஸ்மைல்கேட்’ (Smilegate) அமைப்பின் நிறுவனருமான குவோன் ஹியுக்-பின் (Kwon Hyuk-bin), தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் மனைவிக்கும் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ₹17,000 கோடிக்கும் மேல் / $1.87 பில்லியன்) சொத்துக்களை வழங்கிட வேண்டும் எனச் சியோல் குடும்ப நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


தென் கொரிய வரலாற்றிலேயே வழங்கப்பட்ட மிக அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு இதுவாகும்.
வழக்கின் பின்னணி:
நிறுவன வளர்ச்சி: குவோன் ஹியுக்-பின் மற்றும் அவரது மனைவி லீ ஹ்வா-ஜின் (Lee Hwa-jin) ஆகியோர் 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அடுத்த ஆண்டே (2002) ‘ஸ்மைல்கேட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தயாரித்த ‘கிராஸ்ஃபையர்’ (CrossFire) மற்றும் ‘லாஸ்ட் ஆர்க்’ (Lost Ark) ஆகிய விளையாட்டுகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மனைவியின் பங்களிப்பு: விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய லீ ஹ்வா-ஜின், நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் நிதி உதவி செய்ததாகவும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சொத்தில் 50% கோரிக்கை: இதன் காரணமாக, நிறுவனத்தின் 50% பங்குகளைத் தனக்கு வழங்கிட வேண்டும் என மனைவி தரப்பில் கோரப்பட்டது.
நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சியோல் குடும்ப நீதிமன்றம்:
‘ஸ்மைல்கேட்’ நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை சுமார் 7.1 டிரில்லியன் வான் என மதிப்பிட்டது.
நிறுவனத்தின் வளர்ச்சியில் மனைவியின் பங்களிப்பையும் அங்கீகரித்து, நிறுவனத்தின் 35% பங்குகள் மற்றும் ரொக்கப் பணத்தைச் சேர்த்து மொத்தம் 2.55 டிரில்லியன் வான் (சுமார் ₹17,000 கோடி) தொகையை லீ ஹ்வா-ஜின்னுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டது.
முந்தைய சாதனையை முறியடித்த தீர்ப்பு:
இதற்கு முன்னதாக, தென் கொரியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ‘SK Group’ தலைவர் சே டே-வோன் (Chey Tae-won) தனது முன்னாள் மனைவிக்கு வழங்கிய 944 பில்லியன் வான் (சுமார் $644 மில்லியன்) தொகையே மிகப்பெரிய விவாகரத்துத் தீர்ப்பாக இருந்தது.
தற்போது குவோன் ஹியுக்-பின் விவாகரத்து வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த 2.55 டிரில்லியன் வான் இழப்பீடு, முந்தைய சாதனையை விட இரு மடங்குக்கும் மேல் அதிகம் என்பதால், இது ஆசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!
