பேத்தியைப் பராமரித்து வளர்த்ததற்காகத் தனது சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பின்னணியும் விவாகரத்தும்
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர் சு (60). இவர் தனது மகன் லியாங் உடன் வசித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்குப் பிறகு, தனது 4 வயது மகளைச் சரியாகக் கவனிக்காமல், வேலை நிமித்தமாக லியாங் வெளியில் சென்றுவிட்டார். இதனால், தாய தாயாரான மூதாட்டி சுவின் அரவணைப்பிலேயே சிறுமி வளரத் தொடங்கினார்.

மறுமணமும் மோதலும்
இந்தச் சூழலில், லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது புதிய மனைவியுடன் அவர் தனியாகக் குடியேறினார். ஆனால், தனது மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல், முதிய தாயாரின் பொறுப்பிலேயே மீண்டும் விட்டுச் சென்றார். வயது முதிர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தன்னால் இனிப் பேத்தியைத் தனியாகப் பராமரிக்க முடியாது என்று சு வலியுறுத்தினார். இருப்பினும், மகளைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள லியாங் மறுத்துவிட்டதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு: ரூ.45 லட்சம் கோரிக்கை!
மகனின் பொறுப்பற்ற தனத்தால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சு, தனது சொந்த மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், “மகனுக்குக் குடும்பப் பொறுப்பு ஏதும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாகப் பேத்தியை வளர்த்ததற்காகப் பராமரிப்புக் கட்டணமாக 3.6 லட்சம் யுவான் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.45 லட்சத்திற்கும் அதிகம்) எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
நீதிமன்ற வாதமும் வழக்கின் முடிவும்
இந்த வழக்கின் விசாரணையின் போது, தனக்கு மாதச் சம்பளமாக 3,000 யுவான் (தோராயமாக ரூ.37,000) மட்டுமே கிடைப்பதாகவும், தனது சக்திக்கு உட்பட்டே தாயார் மகளைக் கவனித்துக் கொண்டதாகவும் லியாங் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், “ஒரு குழந்தையை வளர்த்துப் பராமரிப்பதில் முதன்மையான பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உரியது. பேரக்குழந்தைகளைத் தாத்தா, பாட்டிகள் வளர்ப்பதைக் கட்டாயமாகவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வக் கடமையாகவோ கருத முடியாது” என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியது.
நீதிமன்றத்தின் இந்த கடுமையான நிலைப் பாட்டைத் தொடர்ந்து, தனது தாயாருக்கு இழப்பீட்டுத் தொகையாக 2 லட்சம் யுவான் (தோராயமாக ரூ.24 லட்சம்) வழங்க லியாங் சம்மதம் தெரிவித்தார். கூட்டுக் குடும்ப அமைப்பும், பேரக்குழந்தைகளைத் தாத்தா-பாட்டி பராமரிக்கும் கலாச்சாரமும் இயல்பாக உள்ள சீனாவில், இந்த நீதிமன்றத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
