ஈரானுக்கு எதிரான போரில் அதிநவீன போர் விமானங்கள், ராட்சத ஏவுகணைகள் மற்றும் கடற்படை முற்றுகை என அனைத்துவிதமான பில்லியன் டாலர் ஆயுதங்களையும் பிரயோகித்தும் ஈரானை முழுமையாகப் பணிய வைக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருவதாக சர்வதேச அரசியல் களத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானை வீழ்த்த வழக்கமான ராணுவ உத்திகள் பலனளிக்காததால், அமெரிக்கா தற்போது புதிய மற்றும் விசித்திரமான வழிகளை நாடியுள்ளது.


கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. தொடக்கத்திலேயே ஈரானின் உச்சத் தலைவர் உட்பட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதால், இரண்டே நாட்களில் ஈரான் வீழ்ந்துவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கிட்டிருந்தார். ஆனால், ஈரானின் கடுமையான பதிலடியால் அமெரிக்கா தனது அதிநவீன ஆயுதங்களான பங்கர் பஸ்டர்ஸ், எஃப்-35 (F-35) ரக விமானங்கள், டோமோஹாக் ஏவுகணைகள் மற்றும் ‘ஸ்டக்ஸ்நெட்’ (Stuxnet) போன்ற டிஜிட்டல் மால்வேர்களைக் களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றுகையிட்டு பொருளாதார ரீதியாக முடக்க முயன்ற டிரம்ப்பின் திட்டமும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஈரான் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக ‘சமச்சீரற்ற போர்முறை’ (Asymmetrical Warfare) உத்தியைக் கையிலெடுத்தது. வெறும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘ஷாஜித்’ தற்கொலை ட்ரோன்களை வீழ்த்த அமெரிக்கா 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு, அதன் பொருளாதார வலிமை மெல்ல மெல்லக் கரைக்கப்பட்டது.
ஈரானின் இயற்கை அரண்களும் புவியியல் சவால்களும்!
ஈரானின் கரடுமுரடான மலைத்தொடர்களும் (ஜாக்ரோஸ் மற்றும் அல்போர்ஸ் மலைகள்), பிரம்மாண்டமான பாலைவனங்களும் அமெரிக்கப் படைகளுக்கு மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன. மலைகளுக்கு அடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தித் தளங்களை வான்வழித் தாக்குதல்கள் மூலம் முழுமையாக அழிக்க முடியவில்லை. தரைப்படையை அனுப்பினால் வியட்நாம் அல்லது ஆப்கானிஸ்தான் போர்களைப் போன்ற பேரழிவைச் சந்திக்க நேரிடும் என ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் மேற்கொண்டுவரும் துறைமுக முற்றுகைகளும் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தைத் திக்குமுக்காடச் செய்துள்ளன.
புதிய உத்திகளுக்குத் தாவும் பென்டகன் மற்றும் மின்னஞ்சல் கெஞ்சல்!
வான்வழித் தாக்குதல்களால் மட்டுமே ஒரு நாட்டின் கொள்கைகளையோ ஆட்சியையோ மாற்றிவிட முடியாது என்று அமெரிக்கக் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கென் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், வழக்கமான ராணுவ வழிமுறைகள் தோற்றுவிட்டதால், சிஐஏ மற்றும் உளவு அமைப்புகளின் ஆலோசனையின் பேரில், பென்டகன் தனது ராணுவ ஆய்வாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் புதிய மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ வரலாற்றிலேயே இது போன்ற விசித்திரமான நடவடிக்கை அமெரிக்காவின் தற்போதைய நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வியட்நாம் பாணி ‘கௌரவமான வெளியேற்ற’ திட்டம்!
ஈரானை முழுமையாக வெல்ல முடியாது என்பதை உணர்ந்த அதிபர் டிரம்ப், 1970-களில் வியட்நாம் போரின்போது ரிச்சர்ட் நிக்சன் கையாண்ட ‘வியட்நாமைசேஷன்’ (Vietnamization) கொள்கையைப் பின்பற்றி, ஒரு பிரம்மாண்டமான குறியீட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு (Operation Linebacker பாணியில்), அவசர அமைதி ஒப்பந்தத்தின் மூலம் கௌரவமாக வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானை ஏதோ ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்துவிட்டு, போரை முடித்துவிட்டதாக அறிவிப்பதே டிரம்ப்பின் இறுதித் திட்டமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
