காசாவில் போரின்போது சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேதமடைந்த கட்டிடம் இடிந்து விபத்து
காசாவின் தல் அல்-ஹவா பகுதியில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், போதிய மாற்று தங்குமிடங்கள் இல்லாததால் அங்கு சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி
விபத்து ஏற்பட்டதும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். போதிய கனரக இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் இல்லாததால், ஆரம்பகட்டத்தில் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியின் போது 45 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும், பலர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்று தங்குமிடம் இல்லாததால் ஆபத்தான கட்டிடங்களில் மக்கள்
போரால் சேதமடைந்த கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான மாற்று தங்குமிடங்கள் கிடைக்காத சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்களிலேயே பல குடும்பங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காசாவில் சேதமடைந்த மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அவற்றை பாதுகாப்பாக அகற்றவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான உபகரணங்கள் அவசியம் என ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
