பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் ?
அண்ணா பல்கலைக்கழகத்தையும் நீதியரசர் வள்ளி நாயகத்தின் பெயரையும் பயன்படுத்தி நடைபெற்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் மோசடி விவகாரம் – காவல்துறையில் புகார் அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் தனியார் அமைப்பு சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட மோசடி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

கடந்த 26 ஆம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்தது. இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகமும் கலந்து கொண்டார்.
இந்த மோசடி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் கொடுத்த சிபாரிசு கடிதம் அடிப்படையில் விவேகானந்தா ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுத்தோம் என்றார்.
நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைப்பின் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். சட்ட பூர்வமாகவும் இதை அணுக உள்ளோம் என்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி என அரங்கத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டோம் என குறிப்பிட்டார்.
அரங்கத்தை வாடகைக்கு கேட்டு வள்ளி நாயகத்தின் கையெழுத்திட்ட போலி சிபாரிசு கடிதத்தை கொடுத்துள்ளனர். இந்திய அரசாங்க முத்திரையை பயன்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்வு நடைபெறும் என்பதால் தான் வள்ளிநாயகமும் கலந்து கொண்டிருப்பார் என நினைக்கிறோம் என்றார்.
திட்டமிட்டு ஞாயிறு மாலை 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் என தெரிவித்த துணைவேந்தர் வேல்ராஜ், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, குற்றம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.
அத்தோடு தனியார் அமைப்பு சார்பில் கொடுத்த இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பிரபலங்கள் உட்பட 40 பேர் வாங்கி ஏமாந்துள்ளனர்.
ஆளுநர் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை இனி தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்த அமைப்பு அண்ணா பலகலைக்கழகம் பெயரையும், நல்ல மனிதர் வள்ளி நாயகத்தையும் பயன்படுத்தி சர்வதேச மோசடியை செய்துள்ளனர் என தெரிவித்தார்.