பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், வராததும்மாக திமுக வை தாக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளார்.

இதுவரை சவுக்கு சங்கர் அரசுதுறையிலும், அரசியல் வாதிகள் செய்கின்ற ஊழல் குறித்தும் விமர்சனம் செய்து வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின்னர் கொஞ்சம் வேகமாக அரசியல் களத்தை குறிவைத்து பேசி, நகரத் தொடங்கியுள்ளார்.

தமிழ் நாட்டில் உதயாநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று ஆவேசமாக பேசி சமூகவலை தளத்தை சூடுபடுத்தி உள்ளார்.
அரசியல் விமர்சகர் என்ற அளவில் சவுக்கு சங்கருக்கு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கவே செய்தது. அது அரசியல் களத்திற்கு கைகொடுக்குமா என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உதயாநிதி ஸ்டாலினை யார் வேண்டுமானாலும் எதிர்த்து போட்டியிடலாம். வெற்றி பெறலாம். ஆனால் அதற்கு முன்பு அவருடைய கொள்கை என்ன? இதுவரை எந்த மக்களுக்கான அரசியலை பேசினார், எழுதினார் என்று கவனிக்க வேண்டும்.

சவுக்கு சங்கர் பேசியது அனைத்தும் மேட்டுக்குடி மக்களின் அரசியலையும், அவர்களின் கருத்துகளையும் வாந்தி எடுத்து வந்தார். அரசியல் களத்தில் பாஜக என்னென்ன விமர்சனங்களை பேசியதோ, அதையே ஊடகங்களில் சவுக்கு சங்கர் பேசி வந்தார்.
அவர் ஒருபொழுதும் ஏழை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வாழ்வாதாரம் குறித்து பேசியதில்லை. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் புலன் விசாரணை செய்கிறேன் என்று அந்த குழந்தையை மேலும் களங்கப்படுத்தியவர்தான் சவுக்கு சங்கர்.
அதனால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்தப் பின்னர் அவருடைய செயல்பாடுகள், பேச்சுகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் போது அவர் நாம் தமிழர் கட்சி அல்லது பாஜக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றில் ஐக்கியமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நினைத்தது மாதிரியே நாம் தமிழர் கட்சியின் ஆதரவை பெற்றுவிட்டார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சவுக்கு சங்கரும் இணைந்து செய்தியாளரை சந்தித்து உறுதிப் படுத்திக் கொண்டனர்.
சவுக்கு சங்கர் இடது சாரி கொள்கை கொண்டவரா? வலதுசாரி சிந்தனை உள்ளவரா? அல்லது இரண்டையும் கலந்த குழப்பவாதியா என்றெல்லாம் சீமானுக்கு கவலை இல்லை. அவருக்கு முன்னால் இருக்கும் ஒரே எதிரி திமுக. அதனை வீழ்த்த எந்த ஆயுதம் கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்ளும் கொரில்லா போராளியாகவே இருக்கிறார்.
சவுக்கு சங்கரால் லாபம் இருக்கிறதோ இல்லையோ, அவரால் சீமானுக்கு நஷ்டம் எதுவும் இல்லை. சீமானுடன் சவுக்கு சங்கர் இணைந்தது அரசியல் சாதுரியமா? சந்தர்ப்ப வாதமா? பொருத்திருந்து பார்ப்போம்.