சென்னையிலிருந்து மதுரைக்கு 124 பேருடன் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஏர்இந்தியா பயணிகள் விமானம் இன்று மதியம் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 124 பேருடன் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து தலைமை விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.


அதன் பேரில், சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் ஏர் இந்தியா விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு, இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானியின் துரிதமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால் அதில் பயணம் மேற்கொண்ட 124 பேர் உயிர் தப்பியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
