பேருந்துகளில் பிரச்சனையா? இந்த நம்பரில் புகார் கூறலாம்
அரசுப் பேருந்தில் ஓட்டுநர் – நடத்துநரால் பிரச்சனை, பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை ஆகிய பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை, புகார் தீர்வு உதவி எண் மற்றும் பொது இணையதள வசதி உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் குறைகளை தெரிவிக்கவும், அரசு பேருந்துகளுடைய நிலை குறித்தும் தெரிந்து கொள்ள தனி குறைதீர் எண் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் இதனை அறிவித்திருந்தேன். அது இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் புகார் அளிக்க 1800 599 1500 என்ற தனி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிக்கு வரக்கூடிய பேருந்துகளின் நிலை குறித்தும், ஓட்டுநர் – நடத்துனரால் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்தும், பேருந்து பராமரிப்பு குறித்தும் எந்த தகவல் என்றாலும் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை பதிவு செய்து கொண்டு அதற்கு அடையாள எண் வழங்கப்படும். தொலைபேசிக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். அதற்குப் பிறகு அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்படும். விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் இந்த எண்ணை அழைத்து தெரிந்து கொள்ளலாம். அதே போல www.arasubus.tn.gov.in என்ற தனி இணையதளமும் துவக்கப்பட்டு இருக்கிறது” எனக் கூறினார்.