சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்து மொத்த விலையில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடந்த சில வாரங்களை காட்டிலும், கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் இன்று விலை குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளி கடந்த வாரம் 60 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கேரட் கடந்த வாரம் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.30 குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பீட்ருட் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்போது விலை அதிரடியாக உயர்ந்து, கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சீசன் முடிந்த காரணத்தினால் முருங்கை விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களுக்கு இதே விலை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கோயம்பேடு சந்தையில் கடந்த சில மாதங்களாக கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பூண்டின் விலை இன்று, கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களில் புதிய உச்சமாக கிலோ 500 வரை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து பூண்டின் வரத்து குறைவாக உள்ளதாலும், சீசன் இல்லாத காரணத்தினாலும் இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில மாதங்கள் வரை இந்த விலை ஏற்றம் தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.