நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜெகதீச பாண்டியன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- லண்டனில் பெரியார் வாசகர் வட்டம் நடத்திய போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதுதான் நடைபெறக் கூடாது என்று அச்சப்பட்டோம். சீமானை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், அவரை வளர்க்க விதைப் போட்டவர்கள் எல்லாம் அவரது விமர்சனங்களை கேட்டும், அமைதியாக இருக்க காரணமே தமிழர்களுக்குள் மோதல் வந்துவிடக்கூடாது என்றுதான். யாரை எதிர்த்து சண்டை போட வேண்டிய நாம் தமிழர் கட்சியினர், லண்டனில் போய் என்ன செய்துள்ளனர். சீமான் இன்று, தமிழன் தமிழனை தாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளார். இதுதான் பாஜக ஒட்டுண்ணியாக தமிழ் தேசியம் பேசும் சீமானை கையில் எடுத்துக்கொண்டு தமிழர்களுக்குள் தமிழ் தேசியம் மலர்ந்துவிடக் கூடாது என்று பிரிவினையை உண்டாக்குகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை அதிக முறை சந்தித்தது பழ நெடுமாறன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் தான். ஓவியர் புகழேந்தித நெடுநாட்களாக அங்கேயே இருந்தார். அவரிடம் நான் கேட்டபோது, நான் தலைவருடன் சாப்பிட்டது இல்லை. ஆனால் இலக்கியம் பற்றித்தான் பேசுவோம் என்றார். சீமான் சென்றதே மொத்தம் 14 நாட்கள் தான். அதில் அவர் இலங்கை செல்வதற்கே 3 நாட்கள் ஆனது. பின்னர் 3, 4 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தான் அவர் பிரபாகரனை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் பாதுகாப்பான பகுதி. அங்கே சண்டை தொடங்கிவிட்டது. இவர் எப்படி அங்கே சுற்றிப்பார்க்க முடியுமா?. ஓவியர் புகழேந்தி திசைமுகம் என்ற புத்தகத்தில் பெரியார் முகத்தை 25 கோணங்களில் வரைந்து கொடுத்திருக்கிறார். அதனை பிரபாகரன் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். அந்த நூலில் பெரியாரின் போராட்டமும், அவர் இயக்கம் நடத்திய போராமும்தான் தனக்கு தாக்கமாக இருந்தது என்று பிராபாகரன் சொல்லியுள்ளார். பிரபாகரன், மதமும் கடவுளும் தன்னம்பிக்கை இல்லாதவனுக்கும், சுய ஒழுக்கம் இல்லாதவனுக்கும் தான் பயன்படுகிறது என்றும், இது தனது தனிப்பட்ட கருத்து என்கிறார். உலகம் முழுவதும் உள்ள 12 கோடி தமிழர்களுக்கு தலைவர் பிரபாகரன். அவரை பெரியாருக்கு எதிராக சீமான் முன்னிறுத்துகிறார். பிரபாகரனை, பெரியாருக்கு எதிராக நிறுத்தக்கூடாது என்று ஐயா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஐ.டி. விங் என்றால் அது நாம் தமிழர் கட்சி ஐ.டி.விங் தான். நாங்கள் பிரபாகரனை புகழ்ந்து பேசினால், ஆர்எஸ்எஸ்-ஐ வைத்து ரிப்போர்ட் அடிக்க வைத்து, வாட்ஸ்அப், முகநூலை முடக்கியுள்ளனர். வலதுசாரியான கிஷோர் கே.சாமிக்கு, வாழ்த்து சொல்கிறார்கள். அவரது பதிவுக்கு லைக் செய்ததால், கட்சியில் இருந்த நிர்வாகியை கண்டித்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் வெளியேறியதற்கு காரணம் சீமானின் நிர்வாக திறமை இன்மைதான் காரணமாகும். அவர்கள் நினைக்கிறார்கள் சீமான் பயங்கரமாக முடிவு எடுப்பார் என்று. ஆனால் நான் சொல்கிறேன் சீமான் ஒரு எடுப்பார் கைப்பிள்ளைதான். அவர் அருகில் இருந்து பல முடிவுகளை எடுக்க நாங்கள் தான் காரணமாக இருந்தோம்.
தஞ்சை பெரிய கோயிலை 6 ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள். ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்று நிலைத்து நிற்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு அமைப்பை 15 ஆண்டுகள் ஆகியும் கட்டி அமைக்க முடியவில்லையே? கேட்டால் எதற்கு இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம்… நானே ஒரு தலைவர் என்கிறார். கலைஞர், ஜெயலலிதா போன்று சீமான் ஒரு ஆளுமையாக வேண்டும் என்றால் நாங்கள் கே.என்.நேரு, வீரபாண்டியார், கோ.சி. மணி போன்று இருந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சிமானிடம் சொன்னேன். ஆனால் இன்று கட்சியில் யாரும் தனிப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொள்ளக்கூடாது. 8 பூத்துக்களை ஒரு தகுதியாக வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் அமைப்பு முறை இல்லை, வேலைத்திட்டம் இல்லை. ஆனால் தமிழ் தேசியம், தமிழர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள் மட்டும் வைத்துக்கொண்டு விட்டுவிட வேண்டாமா? சீமானுக்கு கொள்கையில் மாற்றம் வந்தால் கட்சியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வேன். கம்யூனிஸ்டுகள் சிறிய கட்சியாக இருந்தாலும் அமைப்பாக உள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. பிரதமர் மோடியே தனது உறுப்பினர் அட்டையை குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்கிறார். அதுபோல நாமும் தேர்தல் நாதகவில் தேர்தல் வைப்போம் என்றேன். அப்படி செய்தால், தேர்வு செய்யப்படும் நபர் ஒரு ஆளுமையாக உருவெடுப்பார். ஆனால் நீங்கள் நிர்வாகிகளை 15 ஆண்டுகளாக செலக்ட் செய்து கொண்டிருக்கிறீர்களே தவிர, எலக்ட் செய்யவில்லை.
திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் எப்போதும் கூட்டணி இல்லை. சரி இங்குள்ள தமிழ் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம் தானே. 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக, நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது. 2021ல் தமிழ்தேசிய கட்சிகள் இணைந்து போட்டியிடலாம் என அழைத்தனர். ஆனால் மறுநாளே நான் தனித்து நிற்கிறேன் என சீமான் அறிவித்தார். தமிழர்கள் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, விஜய் போன்றோர்களும் தமிழர்தானே. தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தோல்வி அடைந்தது, ஒவ்வொருவரிடமும் நாம் தமிழர் கட்சி வந்தே ஆக வேண்டும் என்ற விளைவை ஏற்படுத்தி உள்ளதா? என்றால் இல்லை. ஒவ்வொருவனும் சாதி தமிழன், மத தமிழனாக இருப்பது போல கட்சி தமிழனாகவும் இருக்கிறார்கள்.அப்போது அவர்களது தலைவர்கள் அனைவரையும் நீங்கள் வெறுப்பு அரசியலாக்கிவிட்டால் எப்படி வாக்களிப்பார்கள்.
அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் முடிவு எடுப்பேன். ஏற்கனவே என்னுடன் பயணித்தவர்கள் எல்லாம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். நானும், தமிழகத்தில் இன்னும் சிலர் திமுக, பாஜக போகிறேன் என சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் அழைத்து பேசி, விரைவில் அடுத்தக்கட்ட பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். தமிழ்தேசிய தளத்தில்தான் தொடர்ந்து பயணிப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.