பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இன்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்களும் , 4,33,436 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். அதே போன்று புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 6,982 மாணவர்களும் 7,728 மாணவிகளும் என மொத்தம் 14,710 பேர் தேர்வு எழுதினர்.

அதில் தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 185 பள்ளிகள் தேர்வு மையங்களாகவும், தனித் தேர்வர்களுக்காக 131 தேர்வு மையமும் மற்றும் சிறை கைதிகளுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10 ஆம் தேதி தொடங்கும் என்றும், 21 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.