கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுத் தளங்களில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகளை வெளிகொணரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என அவர் சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடி, ஆதிச்சநல்லூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி கடந்த ஜூலை 2025-லேயே விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையுடன் (ASI) பலமுறை ஆலோசனைகள் நடத்தியும், கடந்த 8 மாதங்களாக ஒன்றிய அரசு அனுமதி வழங்காமல் மௌனம் காத்து வருகிறது.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்:
”தமிழர் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது; அது இந்தியாவின் நாகரிகப் பெருமையையே கூட்டும். அப்படியிருக்கையில், ஒன்றிய பாஜக அரசு எதைக் கண்டு பயப்படுகிறது? அகழாய்வுகளுக்கு உடனே அனுமதி வழங்குங்கள்; வரலாறு பேசட்டும்!” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:
கால விரயம்: தமிழ்நாட்டில் அகழாய்வுப் பணிகளை ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். அனுமதி தராமல் காலம் தாழ்த்துவது, இந்தாண்டுக்கான நிதி மற்றும் உழைப்பை வீணடிக்கும் செயலாகும்.
ஆய்வறிக்கை முடக்கம்: கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட ASI அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை வெளியிடாமல் ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது.
வரலாற்றுச் சிதைப்பு: கீழடி போன்ற அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை விட, ஆதாரமற்ற கற்பனை நாகரிகங்களை முன்னிறுத்தவே ஒன்றிய அரசு விரும்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றை மீட்டெடுப்பதில் தனது அரசு பின்வாங்காது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசு வெளியிடத் தயங்கும் கீழடி ஆய்வறிக்கையை வெளிக்கொண்டு வரவும், நிலுவையில் உள்ள அகழாய்வுப் பணிகளைத் தொடங்கவும் சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் சிவகங்கையில் 24.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர், தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி
