மதுரையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, தனியாா் கல்லூரியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு உரையாற்றினாா்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும், “இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநில மாநாட்டில் கீழடி அகழாய்வு மூலம் நாகரீகத்தை அறிதல் எனும் தலைப்பில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில், “நான் கீழடி ஆய்வு செய்து 10 ஆண்டுகள் ஆகி உள்ளது. கீழடி என்றாலே நிறைய பேருக்கு ஏன் பயம் வருகிறது. கீழடி என்றால் ஏன் அதிர்வுக்கு உள்ளாகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள். இந்தியாவின் பன்முகத் தன்மையை சிலர் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பன்முகத்தன்மைக்கு முதன்மையான உதாரணம் தமிழ். தமிழ்நாட்டின் தொன்மை, வரலாறு பற்றிய ஆய்வுகள் முழுமையாக பொதுவெளிக்கு வராமல் தடுக்கப்படுவது எங்களுக்கு மிக வருத்தமாக உள்ளது.
பழம்பெரும் தொன்மை நாகரிகம் தமிழ் நாகரீகம். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு தொடர்பாக இன்னும் நிறைவு ஆய்வுகள் முடிவுகள் வரவில்லை. அதுபோன்ற ஆய்வுகளுக்கு முடிவுகளுக்கு தடை உள்ளது.

2015 வரை கீழடி பற்றி எனக்கும் தெரியாது. இன்று கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. கீழடியில் விரிவான அகழாய்வு நடைபெற்றதே அதற்கு காரணம். 150க்கும் மேற்பட்ட அகழாய்வு தமிழ்நாட்டில் நடந்துள்ளது.
15 லட்சம் ஆண்டுக்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான தடயம் தமிழகத்தில் உள்ளது. அக்கரம்பாக்கம் ஆய்வுகள் குறித்து யாருக்கேனும் தெரியுமா?. நிமிர்ந்த மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்தை ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். அக்கரம்பாக்கம் முடிவுகள் வெளியே தெரிந்ததா? இப்படி பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளது தமிழகத்தில். ஹெமோசேப்பியன்ஸ் மரபு குறித்தும் ஆதாரங்கள் தமிழகத்தில் கிடைத்தது.
உசிலம்பட்டியில் விருமாண்டி என்பவர் 60 ஆயிரம் ஆண்டுக்கு முன்பான மரபணுவோடு வாழ்ந்து கொண்டுள்ளார். கீழடியில் விரிவான தொல்லியல் அகழாய்வு நடந்ததன் காரணமாகவே அது இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான். இந்த ஆய்வுகளை எல்லாம் செய்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல.
ஹோமோசேப்பியன்ஸ் இனத்தின் மரபணு கிடைத்த இடம் தமிழ்நாடு. 60,000 ஆண்டுகளாக இங்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை இன்று முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை. கிமு 300 என்ற காலம் தான் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு நாம் இருந்தோம் என்று சொல்லும் நாள் என்று வரும் என தெரியவில்லை.
கிமு 300 என்ற கருத்தை மாற்ற நாங்கள் முயல்வதால் தான் இத்தனை பிரச்னைகளை சந்திக்கிறோம். ஆய்வு செய்தவனுக்கு தான் உண்மை தெரியும். என் ரிப்போர்ட் எனக்கு தான் தெரியும். அதன் உண்மை எனக்கு தான் தெரியும். என் ரிப்போர்ட்டை வைத்து இன்னும் 1000 ஆய்வுகளை செய்யலாம். நான் உண்மையை தான் எழுதியுள்ளேன்.
கீழடி ஆய்வு அறிக்கையில் திருத்தம் செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை. அந்த அறிக்கை வெளியானால் அது இன்னும் நிறைய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். பல ஆய்வாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை கேட்டு பழகிய நாம், வரலாற்றை புரிந்து கொள்ள பழகவில்லை. ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் நம்முடைய வரலாறு நமக்கு தெரியாது. வரலாறு எழுதும் முறையை அவர்கள் தான் நமக்கு கற்று கொடுத்தவர்கள். வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆய்வாளர்க்கு பிராமணர்கள் உதவி செய்துள்ளனர்.
சிந்துசமவெளி நாகரீகம் இருந்ததே 1923ல் தெரியவந்தது. அதற்கு முன்னர் வரை அது பௌத்த சமயம் சார்ந்த ஒரு இடம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னரே, அந்த நாகரீகம் பௌத்த சமய காலத்திற்கு முந்தையது என்பது தெரிய வந்தது. தொல்லியல் ஆதாரங்கள் பல மாற்றத்தை உருவாக்கும். அந்த அய்வுகள் மூலம் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். வரலாற்றை சலிப்புக்குரிய பாடமாக பார்த்துக்கொண்டுள்ளோம்.
ஆனால் நமது வரலாறு முக்கியமானது. அறிவியலோடு இணைந்தது. வரலாறு ஒரு அறிவியல். அதனை அறிவியல் தன்மையோடு தான் அணுக வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே அது நமக்கு புதிய செய்திகளை அளித்துக் கொண்டே இருக்கும்.
பானை ஓடுகளில் எழுதும் முறை இந்தியாவில் எங்குமே இல்லை. தமிழகத்தில் மட்டுமே உள்ளது. பானையில் எழுதுவது வித்தியாசமான முறை. எழுத்துப்புழக்கம் தமிழகத்தில் தான் உருவாகி இருக்கும் என அறிந்து கொள்ள முடிகிறது. கீழடியில் 1672 பானை ஓடுகளில் எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் பானையில் எழுத்து எங்கும் இல்லை. எழுத்து இங்கே தான் உருவாகி இருக்கும். எழுத்து உடனே உருவாக வாய்ப்பில்லை. அதனால் நிச்சயம் எழுத்துப்புழக்கம் உருவான மையமாக தமிழகம் இருந்திருக்கும்.
கீழடி பானை எழுத்துக்கள் சாமானியரிடம் இருந்த எழுத்து அறிவை காட்டுகிறது. எழுத்து உருவாக்கம் தமிழ்நாட்டில் தான் துவங்கியது என்பதற்கான ஆதாரங்கள் இவை.
எழுத்துக்கு முன்பாக குறியீட்டை பயன்படுத்தி உள்ளனர். எழுத்து பயிற்சிக்காக குறியீட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படி 2474 குறியீடுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளது. எனவே எழுத்து உருவாக்கம் எழுத்து பயிற்சி கீழடியில் உருவாகி உள்ளது. தமிழகம் தான் எழுத்து உருவாக்கம் நடந்த இடம் என்பதில் பெருமையாக உள்ளது.
வெளிப்படையாக பணியாற்றியதால் கீழடி உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. கீழடியை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பது தான் என்னிடம் பலரும் அதிகமாக கேட்ட கேள்வி. அதற்கு நாங்கள் முறையாக ஆதாரங்களோடு விளக்கி சொன்னதால் மட்டும் தான் இன்று கீழடி இவ்வளவு தூரம் பேசப்படுகிறது. கீழடி அளவுக்கு வேறு எந்த இடங்களும் விளக்கி சொல்லப்படவில்லை.
சங்க காலத்தின் வயது கி.மு.800 என்பது தான் கீழடி சொல்லும் செய்தி. இங்கு ஒரு நகரம் இருந்திருக்கிறது. மதுரை என்ற ஒரு நகரம் 2600 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற ஆதாரங்களை மதுரையை சுற்றியுள்ள பல ஆய்வுகளும் சொல்கின்றன.
கோவில் கல்வெட்டுப்படி கிமு 9ம் நூற்றாண்டு மதுரை தோற்றம். ஆனால் அது அல்ல உண்மை. மதுரையை சுற்றி உள்ள பல கல்வெட்டுக்கள் மதுரை 2500 ஆண்டுகள் பழமை என்பதை சொல்லுகிறது. இதுபோன்ற ஆய்வுகளை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இவ்வளவு புதைப்பிடங்கள் இருப்பதன் அடிப்படையில் பார்த்தால் இங்கு தமிழர்கள் நிலையான வாழ்க்கையை கொண்டிருந்தார்கள் என்பது நிரூபணமாகிறது. 5% ஆய்வு கூட இதுவரை கீழடியில் செய்யப்படவில்லை. ஆனால், அந்த அளவு செய்யப்பட்ட ஆய்வே இன்று உலகை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
சங்க இலக்கியம் முழுக்க தமிழர் சமூக வாழ்வியல் சார்ந்த இலக்கியம். அது, மக்களின் பண்பாட்டை, நகரங்களை, துறைமுக மூலம் நடைபெற்ற வெளிநாட்டு வணிகம் பற்றிய தகவல்களை சொல்கிறது. இதற்கு தொல்லியல் ரீதியாக ஆதாரத்தை காட்டுங்கள் என்றார்கள். இப்போது ஆதாரத்தை காட்டினால் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அகழாய்வு மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் வரலாற்றின் கோட்பாட்டை மாற்றும். இரும்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது என்றால் இங்கு அப்போதே நகரம் உருவாகி இருக்காதா? இரும்பு தொழில்நுட்பம் தான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது. கீழடி சொல்கிறது தமிழகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரண்டாம் கட்ட நகர நாகரிகம் இருந்தது என்பதே உண்மை” அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.
கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்


