ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், சிலிண்டருக்கு பாடை கட்டி நூதனமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டத்தில் பேசும்போது பெ. சண்முகம் கூறியதாவது, இதில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என மோடி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? என கேள்வி எழுப்பினாா்.
முன்பு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868 ஆக இருந்தது. தற்போது அது ரூ.928 ஆக உயர்த்தப்பட்டு ரூ.60 அதிகரித்துள்ளது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1929 இலிருந்து ரூ.2043.50 ஆக உயர்த்தப்பட்டு ரூ.115 அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்கள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக கேஸ் விலையை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம்.
மேலும், மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழ்நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் Israel இணைந்து Iran மீது நடத்தும் தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதனால் உலகளாவிய பொருளாதார பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த போரை உடனடியாக நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
அதே நேரத்தில் ஒன்றிய அரசு முன்வைத்து வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் சிபிஎம் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக சண்முகம் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்துவது கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது என்றும், இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு சிபிஎம் முழுமையான ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் பீகார் அரசியல் நிலவரத்தையும் அவர் விமர்சித்தார். தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைப்போம் என வாக்கு கேட்ட நிலையில் பின்னர் அரசியல் மாற்றங்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் தகவல் தெரிவித்தார். திமுக மற்றும் சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை சிபிஎம் கோரியுள்ளதாகவும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.
ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…
