தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு உத்தரவு தமிழ்நாடு அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.


இதுவரையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைந்துள்ள வளாகங்களிலேயே பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மேலும், பார்களுக்கான உரிமம் (License) வழங்குவது மற்றும் அவற்றுக்கான கட்டண நடைமுறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தன.
100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அனுமதி
தற்போது அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, இனி டாஸ்மாக் மதுக்கடைகளுடன் நேரடியாக இணைந்து மட்டுமே பார் அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மதுக்கடைகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் இடவசதி மற்றும் புதிய டெண்டர் வாய்ப்பு
மேலும், பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நநபர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய நநபர்களும் ஏலம்/டெண்டரில் சுலபமாகப் பங்கேற்கும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் தொடரும்
பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
