Homeசெய்திகள்தமிழ்நாடுமனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? 'முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!' –...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி இராமதாஸ்

we-r-hiring

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில், முதலில் ’வந்தே மாதரம்’ பாடலும், அடுத்து ’ஜன கண மன’ தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான் ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையின் கண்டிப்பான வழிகாட்டுதலின்படியே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல் புறக்கணிப்பு: குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் விழாக்களில் மாநிலப் பாடல் (தமிழ்த்தாய் வாழ்த்து) தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல், மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த ஜூலை 9-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான ஆணையைப் பிறப்பித்துள்ளது.

மத்திய அரசே இத்தகைய தெளிவான வழிகாட்டுதலை வழங்கிய பின்னரும், வந்தே மாதரம் பாடலைத் தான் முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடாகும்.

தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது: ’நீராருங் கடலுடுத்த’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆவார். அவரது பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே, மத்திய அரசின் விதிகளையும் மீறி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்படுவதை பல்கலைக்கழக நிர்வாகம் அப்படியே ஏற்றுக்கொள்வது சரியல்ல.

இதனைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“நீட் என்பது தேர்வே அல்ல; அது ஒரு சூதாட்டம்!” — திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆவேச பேச்சு

MUST READ