spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் - பெ.சண்முகம்

போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்

-

- Advertisement -

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் - பெ.சண்முகம்மேலும், இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “தொழிற்சாலைகளில் மோசமான பணிச் சூழலில் உயிரிழந்த பெண் தொழிலாளர்களுக்கான விடியலில் துவங்கி சம ஊதியம், வேலை நேர வரம்பு, வாக்குரிமை, சமூக மரியாதை ஆகியவற்றுக்காக போராடிய பெண்கள் இயக்கங்களின் ரத்தமும், வியர்வையும் கலந்த வீர வரலாறே மகளிர் தினம்.

இத்தகைய தீரமிக்க போராட்ட மரபை அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைப்புச் சுரண்டல், சமூக அநீதி ஆகியவற்றை எதிர்த்து இந்தியாவிலும், உலகெங்கிலும் நடத்தி வருகிற அனைத்து ஜனநாயக முற்போக்கு பெண்கள் அமைப்புகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

we-r-hiring

வளங்களை சூறையாடும் நோக்கோடு நாடுகளின் மீது அடுத்தடுத்து போர் தொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல் உலகம் முழுவதும்  பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  போர் நடைபெறும் நாடுகளில் எல்லாம் பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். எனவே, பெண் விடுதலைக்காக குரல் எழுப்பும் சர்வதேச மகளிர் தினத்தில் போருக்கு எதிராகவும் நாம் உரத்து முழங்க வேண்டும்.

இன்றைய இந்திய அரசியல் சூழலில், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கம், மனுவாத சிந்தனை, ஜனநாயக விரோத, மதவெறி அரசியல் ஆகியவை ஒன்றிணைந்து, பெண்களின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் நேரடியாக தாக்கி வருகின்றன. வேலை வாய்ப்புகள் சுருக்கப்படுதல், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுதல், தொழிலாளர் சட்டங்கள் பலவீனப்படுத்தப்படுதல் ஆகியவை பெண்களை அதிகமாக பாதிக்கும் கொள்கைகளாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்புசாரா துறைகளில் பெரும்பான்மையாக பணிபுரியும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானம், வீட்டு வேலை, சிறு தொழில்கள், அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு உள்ளிட்ட திட்டப் பணியாளர்கள், குறைந்த ஊதியம், நிரந்தரமற்ற வேலை, சமூக பாதுகாப்பு இல்லாமை போன்ற கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளனர். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பெண்களின் தினசரி வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் கூட பெண்கள் மீது அதிகமான பாதிப்புகளை உருவாக்குவதோடு, குடும்ப வன்முறைகள் அதிகரிப்புக்கும் வழி வகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் பொருளாதாரச் சுரண்டல் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மனுவாத அரசியல், சமூகத்தில் பெண்களை இரண்டாம் நிலை குடிமக்களாக நீடிக்க வைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. பெண்களின் உடை, கல்வி, வேலை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பலவித வன்முறைகள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும்போதும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படும் சூழல் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நீதிமன்றங்களும் பெண்கள் மீதான வன்முறைகளை மனுவாத சிந்தனையுடன் அணுகி அளிக்கும் தீர்ப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்தச் சூழலில், மார்ச் 8 என்பது பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்த உறுதி எடுக்க வேண்டிய நாளாகும். பிற்போக்கு மற்றும் பழமைவாத கருத்துக்களை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், அதனோடு கூட்டுச் சேர்ந்து நிற்கும் அனைத்து அரசியல் சக்திகளையும் எதிர்வரும் தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

பெண்கள் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை. பெண்களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை காக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்” என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

 

MUST READ