மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் செல்வது மிகப்பெரிய தவறு என்றும், கர்நாடக அரசின் சூழ்ச்சியில் அவர் விழக்கூடாது என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
“கர்நாடகாவின் சூழ்ச்சியில் விழக்கூடாது”
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “காவிரியின் குறுக்கே மேகதாது அண கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு எந்தச் சூழலிலும் இடம் கொடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பது மிகப்பெரிய தவறு. இதன் மூலம் கர்நாடக அரசு விரிக்கும் சூழ்ச்சி வலையில் முதலமைச்சர் விழுந்துவிடக் கூடாது.”
பாஜக – காங்கிரஸ் கூட்டுச் சதி எனச் சாடல்
காவிரி உரிமையைப் பறிக்கும் இந்த விவகாரத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்குச் சமம். எனவே, இந்தச் சந்திப்பைக் கைவிட்டு, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடுமையான அழுத்தத்தை அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

