அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை நிரூபித்துள்ளது என திமுக எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”கடந்த 5 ஆண்டுகளில் அமலக்கத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது விண்ணளவு உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் ரூ.304.66 கோடியாக இருந்த இந்த நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில் மலைக்கத்தக்க வகையில் ரூ.1,053.92 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2021 -2026 வரையிலான காலகட்டத்தில், ஒன்றிய அரசானது சுமார் ரூ.3,444 கோடி வரிசெலுத்துவோரின் பணத்தை அமலாக்கத் துறைக்காக ஒதுக்கியுள்ளது. இந்த ரூ.3,444 கோடி நிதி ஒதுக்கீட்டினால் நமக்கு கிடைத்தது என்ன?

ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில், அமலாக்கத் துறை 4,377 அமலாக்க வழக்குகள் தொடர்பான தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 9,964 சோதனைகளை நடத்தியுள்ளது.. மேலும் பணமோசடி தடுப்புச் சட்டம்- 2002 -ன் கீழ் 903 நபர்களைக் கைது செய்துள்ளது. அமலாக்கத் துறை இதுவரை 124 நபர்கள் சம்பந்தப்பட்ட 59 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுத் தந்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், 4,377 விசாரணைகள், 9,964 சோதனைகள் மற்றும் 903 கைதுகளுக்குப் பிறகு, வெறும் 124 நபர்கள் மட்டுமே குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
சதவீதம் அடிப்படையில், அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 13.73% பேர் மட்டுமே குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர். வேறு வகையில் சொல்வதானால், அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டவர்களில் 86.27% பேர் நிரபராதிகள்.
அப்படியானால் சற்று சிந்தித்துப் பாருங்கள், தங்களின் அரசியல் எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே அமலாக்கத்துறையானது கைது, சோதனை, சமூக அவமதிப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 4,377 ECIR-களின் அடிப்படையில் பார்த்தால், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
பதிவு செய்யப்பட்ட 98 % அதிகமான வழக்குகளில் தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. பணமோசடி தடுப்புச் சட்டன் கீழ் லஞ்சப் புகார்கள் தொடர்பான சுமார் 620 வழக்குகளை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளதாக அரசின் பதில் தெரிவிக்கிறது.
இந்த வழக்குகளில், ரூ.12,295 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, 126 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 286 குற்றப்பத்திரிகைகளும், 90 கூடுதல் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், லஞ்சம் தொடர்பான இந்த வழக்குகளில் இதுவரை வெறும் 29 நபர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் வழக்குகளில் இது வெறும் 4.67% தண்டனை விகிதம் மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத் துறை மொத்தம் 88 நபர்களுக்கு மட்டுமே தண்டனை பெற்றுத் தந்துள்ள நிலையில்,ஒரு நபரைக் குற்றவாளி என நிரூபிப்பதற்கான முதலீடு சராசரியாக ரூ.38.69 கோடி மக்கள் வரிப்பணமாக உள்ளது. இந்த எண்களானது, அடிப்படையான மற்றும் தவிர்க்கமுடியாத கேள்விகளை எழுப்புகிறது.
அமலாக்கத் துறை போன்ற ஒரு விசாரணை அமைப்பு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தைச் செலவழித்தும், மிகக் குறைவான நீதித்துறை முடிவுகளை மட்டுமே எட்டுவதற்கு என்ன காரணம்? விசாரணைகளும் கைதுகளும் மிக வேகமாக அதிகரிக்கும் வேளையில், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருப்பது,அமலாக்கத் துறை ஒரு முதன்மையான நிதிக்குற்றப் புலனாய்வு அமைப்பாகச் செயல்படுவதற்குப் பதிலாக,அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது என்ற பிம்பத்தை தவிர்க்க முடியாமல் உருவாக்குகிறது.
ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ள இந்தத் தரவுகள்,மிகவும் கவலைக்குரிய ஒரு போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதாவது, நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரங்கள் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆனால்,நீதித்துறை ரீதியான முடிவுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. அதிகாரம்,செலவினம் மற்றும் அதன் முடிவுகளுக்கு இடையே உள்ள இத்தகைய மிகப்பெரிய முரண்பாடு தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
ஏனெனில்,சட்டத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஒருபோதும் அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மாறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அமலாக்கத் துறையை முழுமையாகச் சீரமைப்பதற்கும்,பணமோசடி தடுப்புச் சட்டம்மறுசீரமைக்கவும் சரியான தருணம் இதுவாகும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!
