கூலி படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக தற்போதைய தகவல்களை தெரிவிக்கின்றன. அதாவது இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. இதனால் குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில் தான் சிங்கப்பூரில் ‘கூலி’ படத்தை மறு தணிக்கை செய்து 4 நிமிட காட்சியை நீக்கி, No Children under 16 என்பதிலிருந்து Parents strongly cautioned என மாற்றப்பட்டு இருக்கிறது. இதுபோல் உலகம் முழுவதும் குழந்தைகளும் ‘கூலி’ படத்தை பார்க்கும் படி அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.