உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக வீசப்பட்ட செருப்பு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது 72 வயது மதிக்கத்தக்க முதிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்க முயற்சித்துள்ளார். செருப்பை வீசுகிறபோது அவர் சனதான தர்மத்தை எதிர்ப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று கூறியுள்ளார். இதுதான் இந்தியாவுக்கு தனது செய்தி என்று திறந்த நீதிமன்றத்தில் பிரகனடம் செய்துள்ளார். அந்த நபரை காவலர்கள் வெளியே கொண்டுசென்ற பின்னர் நீதிமன்றத்தில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இந்நிகழ்வை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று அலட்சியப்படுத்தி விட்டார். தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று பின்னர் விடுவித்துவிட்டனர். இந்திய பார் கவுன்சில் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மாதம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பாக பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ராகேஷ் தலால் என்பவர் தொடர்ந்த மனுவில் கஜுராஹோவில் உள்ள விஷ்ணுவின் சிலை முகலாயர் படையெடுப்பின்போது சேதமடைந்துள்ளதாகவும், அதனை புதிதாக செய்து வைக்க வேண்டி தான் மத்திய தொல்லியல் துறையிடம் மனு அளித்தபோது மறுத்துவிட்டதாகவும், தொல்லியல் சின்னங்களில் தாங்கள் திருத்தம் செய்ய முடியாது என்று அவர்கள் கூறி விட்டதாகவும் ராகேஷ் தலால் தெரிவித்திருந்தார். அப்போது மத்திய தொல்லியல் துறையினர் விதிகளின் படியே செயல்படுகிறார்கள். அனாவசியமாக நீதிமன்றத்திற்கு வந்து நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என்று தலைமை நீதிபதி கூறினார். தன்னுடைய வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை நீதிமன்றம் உறுதி செய்யாதா? என்று ராகேஷ் தலால் தரப்பில் கேள்வி எழுப்பியபோது, எரிச்சல் அடைந்த நீதிபதி கவாய், அங்கே சேதமடையாமல் ஒரு சிவலிங்கம் இருக்கும் நிலையில் அதை வழிபட கூடாதா? என்றும், இல்லாவிட்டால் இந்த தலையை சரிசெய்ய வேண்டி உங்கள் கடவுளிடமே வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
நீதிபதியின் இந்த கருத்து, அவர் இந்து மதத்தை அவமதித்துவிட்டார் என்று சொல்லி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதன் பிறகு வழக்கு ஒன்று விசாரணையின்போது நீதிபதி கவாய் தன் மீது எழுப்பப்படும் விமர்சனத்தை சுட்டிக்காட்டி, தான் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்று விளக்கம் அளிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாளிதழான ஆர்கனைசர் வெளியிட்ட செய்தியில், கவாய் தெரிவித்துள்ள கருத்து இந்துக்களை புண்படுத்தி இருப்பதாக சொல்கிறது. கவாயினுடைய கருத்து சமூக வலைதளங்களில் இந்துத்துவ சக்திகளிடம் பெரும் கொந்தளிப்பை, வெருப்பை ஏற்படுத்தியது. அது அப்படியே பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக ராகேஷ் கிஷோர் செருப்பை வீசியுள்ளார். போலீசார் விசாரணையின்போது அவர், தான் செய்தது தவறு இல்லை என்றும் சொல்கிறார். மேலும், மொரிஷியசில் சென்று உரையாற்றிய தலைமை நீதிபதி கவாய், இந்தியாவில் புல்டோசர் ஆட்சி அல்ல. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக கூறியதாகவும், முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மாவை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இந்துக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. நான் தெளிவான சிந்தனையோடுதான் இதை செய்துள்ளேன் என்று சொல்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அரசமைப்பு சட்ட உணர்வில் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். இது ஒரு கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்று சொல்லியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, ஒரு அரசமைப்பு சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிற ஒரு மனிதரை, அச்சுறுத்தும் செயல் இது. கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்புணர்வு எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. ராகேஷ் கிஷோரின் பேச்சில் இருந்து அவரை என்ன சித்தாந்தம் வழிநடத்தி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக தலித்துக்கு எதிரான குற்றம் என்று பேசுபவர்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகள் ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், பெருந்தன்மையோடு ராகேஷ் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், தீண்டாமை ஒழிப்பு சட்டம் எதற்காக இருக்கிறது. காலனி என்கிற தனிக்குடியிருப்பை, தனி சுடுகாட்டை, கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காததையும் பெருந்தன்மை காரணமாகவா எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிற சாதி இழிவு. இதை ஏற்க மறுப்பவர்கள், அதற்கு எதிரான விமர்சனத்தை கவாய் போல மிக மென்மையாக பேசினாலும் கூட, அவர் தலைமை நீதிபதியாகவே இருந்தாலும் அவருக்கு எதிராக செருப்பை வீசுகிறார்கள். காந்தி எதற்காக கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்? அது மதன்மோகன் மாளவியா, சாவர்க்கர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அது தேசப்பிரிவினையால் ஏற்பட்ட அதிருப்தி மட்டும் அல்ல. சனாதன கோட்பாட்டில் ஒரு விரிசலை ஏற்படுத்த காந்தி முயற்சிக்கிறார் என்கிறபோது தான் கோட்சே காந்தியை கொல்கிறார். ராகேஷ் கிஷோரை போலவே கோட்ஷேவும் காந்தியை சுட்டுக்கொன்றது நியாயம் என்று வாதாடினார்.
கர்நாடாகவை சேர்ந்த கவுரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர் போன்றவர்கள் சனாதனத்திற்கு எதிராக போராடியதால் கொல்லப் பட்டனர். நம் முன்னால் இருப்பது வீசப்பட்டது செருப்பா? அல்லது துப்பாக்கி தோட்டவா? என்து அல்ல. நடைபெற்றுள்ளது அப்பட்டமான சனாதன, பார்ப்பன மேலாதிக்க பயங்கரவாத நடவடிக்கை. கவாய் என்பவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர். அரசமைப்பு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுபவர். அவருக்கு எதிராக வீசப்பட்ட செருப்பு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். அரசமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கருக்கு எதிரானதாகும். என்ன செய்யப் போகிறோம்?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.