காந்தா படத்தின் திரைவிமர்சனம்
துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதியின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காந்தா திரைப்படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒரு இயக்குனருக்கும், அவர் உருவாக்கிய ஒரு நடிகருக்கும் இடையிலான ஈகோவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த காந்தா.

அதன்படி இயக்குனர் சமுத்திரக்கனி உருவாக்கும் கனவு படத்தின் பெயர் தான் காந்தா. இவர் துல்கர் சல்மானை, நடிப்பின் சக்கரவர்த்தியாக மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் கதையின் கிளைமாக்ஸில் மாற்றம் செய்ய வேண்டும் என துல்கர் சல்மான் தயாரிப்பாளரிடம் பேச, என் கதையை நீ எப்படி மாற்ற முயற்சிக்கலாம்? என சமுத்திரக்கனிக்கும், துல்கர் சல்மானுக்கும் இடையில் ஈகோ உண்டாகிறது. இப்படி இருவருக்கும் ஈகோ பிரச்சனை தொடர்ந்தாலும், தன்னுடைய கனவு படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி நினைக்கிறார். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியை தன்னுடைய விருப்பப்படி மாற்ற வேண்டும் என உறுதியாக இருக்கிறார் துல்கர் சல்மான். சமுத்திரக்கனியும் இதற்காக பாக்யஸ்ரீ போர்ஸின் உதவியை நாடுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்துள்ளார் துல்கர் சல்மான். அவருடைய நடிப்பை பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழக்கம் போல் காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பின்னி பெடலெடுத்து இருக்கிறார். அவருடைய லுக், நடிப்பு என அனைத்துமே அவருக்கு கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு இணையாக சமுத்திரக்கணியும், பாக்யஸ்ரீ போர்ஸும் நடித்துள்ளனர். அதாவது சமுத்திரக்கனி வேறொரு பரிமாணத்தில் நடித்து அசத்தியுள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். ராணாவின் நடிப்பும் அருமை. இருப்பினும் சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பழம்பெரும் நடிகரின் கேரக்டரை மையமாக வைத்து ஒரு சுவாரஸ்யமான திரைக் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். படத்தில் சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும், படம் விறுவிறுப்பாக செல்வது அதை மறக்கச் செய்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்ததோடு அந்த காலத்திற்கே நம்மை கூட்டி செல்கிறது. மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படம் தான் ‘காந்தா’.


