சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கியூப் (Qube) நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பணப் பிரச்சனையால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில், வடமாநிலங்களில் சில திரையரங்குகளில் திரைப்படம் வெளியானதாக தகவல் வெளியாகியது. திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் க்யூப் நிறுவனம், உரிய முன்னறிவிப்பு இல்லாமல் திரைப்படத்தை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடி க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிவா, க்யூப் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் தவறால் திரைப்படம் வெளியானதாக தெரிவித்தார். மேலும், வடமாநிலங்களில் படம் வெளியானதன் காரணமாக சட்டவிரோதமாக இணையத்திலும் படம் கசிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து க்யூப் நிறுவனம் தயாரிப்பாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், ‘கருப்பு’ திரைப்பட வெளியீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இன்று இரவுக்குள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு படம் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
சுமார் ரூ.140 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், ஓடிடி உரிமை விற்பனையில் வெறும் ரூ.30 கோடிக்கு மட்டுமே விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த நிதிச் சிக்கல்களைத் தீர்த்து படம் தடையின்றி திரையரங்குகளில் வெளியாக நடிகர் சூர்யா தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
