இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’திரைப்படம் பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், படத்தின் கதாநாயகியான நடிகை த்ரிஷா சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு நேரில் வந்து ரசிகர்களுடன் இணைந்து ‘கருப்பு’திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை (FDFS) பார்த்துள்ளார்.
ரசிகர்களுடன் படம் பார்த்த த்ரிஷா:

பல்வேறு நிதிச் சிக்கல்கள் மற்றும் ரிலீஸ் தள்ளிவைப்பு போன்ற தடைகளைக் கடந்து படம் திரைக்கு வந்துள்ளதால், ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்தை நேரில் காண நடிகை த்ரிஷா இன்று காலை ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்தார். அவருடன் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.
திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்:
திரையரங்கிற்குள் த்ரிஷாவைக் கண்டதும் ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம் முடிந்து த்ரிஷா தியேட்டரை விட்டு வெளியேறிய போது, அவரைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், புன்னகையுடனும் கைகூப்பியும் நன்றி தெரிவித்தபடி நடிகை த்ரிஷா அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், தியேட்டர்களில் சூர்யா மற்றும் த்ரிஷா ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்
