தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது. இதனால் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் 7000 பேர் பாதிக்கப்படுவாா்கள் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.
நடிகர்கள் தங்களது சம்பளத்தை, வருமான விகிதாச்சாரம் அடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற முக்கிய தீர்மானத்தை சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காணாவிட்டால், இன்றைய தினத்தில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் முடிவு எட்டாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பிற்கு பிறகு அறிக்கையின் மூலமாக மாறி மாறி தங்களது கருத்துக்களை நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி தங்களது அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த அடையாள வேலை நிறுத்தத்தால் பெப்சி யூனியனில் இருந்து ஏழாயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தத்திற்கு பெப்சி யூனியன் முழு ஆதரவு அளிப்பதாக பெப்சி யூனியனின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, சிறிய மற்றும் பெரிய படம் என ஒரு நாளைக்கு 30 முதல் 40 படங்களுக்கான படப்பிடிப்பு நடைபெறும். அதில் பெரிய படத்திற்கு ஒரு நாளைக்கு 300 முதல் 500 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் எனவும் அதேபோல சிறிய படத்திற்கு 150 பேர் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர்கள், துணை நடிகர்கள், கலை, ஒப்பனை, சமையல், நடனம், காஸ்டியூம், அவுட்டோர் யூனிட் என ஐந்தாயிரம் பேரும், படப்பிடிப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளான ஃப்ரீ ப்ரொடக்சன் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் ஈடுபடும் 2000 நபர்களை சேர்த்து ஒட்டுமொத்தமாக ஏழாயிரம் பேர் இன்று ஒரே நாளில் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
