இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், புராண வரலாற்றின் அடிப்படையில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக முன்னணி நடிகை சாய் பல்லவியும், லங்காபதி ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யார்த்தும் மிகச் சிறப்பான முறையில் நடித்துள்ளனர். மேலும், பல முக்கியக் கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் களமிறங்குகின்றனர். அதன்படி, பலவான் அனுமனாக பிரபல நடிகர் சன்னி தியோலும், ராவணனின் மனைவியாக மண்டோதரியாக நடிகை காஜல் அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இசை ஜாம்பவான்களின் கூட்டணி
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் புகழ்பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் முதன்முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டுத் தேதிகள் விவரம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. மிகக் கடினமான கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகளுடன் தயாராகிவரும் இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி அன்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளி அன்றும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

