தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனஸும் இணைந்து பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு சர்வதேசப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


இந்தியாவை விட்டு அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தனது கலாச்சாரத்தையும் பண்டிகைகளையும் தொடர்ந்து கொண்டாடி வருகிறார் பிரியங்கா சோப்ரா. அந்த வகையில், அக்டோபர் 30-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நட்சத்திரங்கள் பங்கேற்ற தீபாவளி கொண்டாட்டம்!
இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரபல மாடல் வின்னி ஹார்லோ, யூடியூபர் லில்லி சிங், பாடகி ரியா ராஜ், நடிகை சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பிரியங்காவின் மேலாளர் அஞ்சுலா ஆச்சாரியா உள்ளிட்ட நண்பர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாரம்பரிய இந்திய அலங்காரங்கள், மலர் மாலைகள், அகல் விளக்குகள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் பிரியங்காவின் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தப்பாட்ட இசை மற்றும் பாரம்பரிய கொண்டாட்டங்களுடன் விருந்து உற்சாகமாக நடைபெற்றது.
பர்கண்டி நிற கவுனில் அசத்திய பிரியங்கா!
இந்த விருந்தில் பிரியங்கா சோப்ரா அடர் பர்கண்டி நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட பிரமாண்ட கவுன் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அந்தக் கவுனில் பாரம்பரிய ஜர்தோசி எம்பிராய்டரி, தங்க நூல் வேலைப்பாடுகள் மற்றும் மணிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நவீன ஆடை வடிவமைப்புடன் இந்திய பாரம்பரியக் கலைநயத்தையும் இணைக்கும் வகையில் அவரது ஆடை அமைந்திருந்தது.
தலையில் வெள்ளை மல்லிகைப்பூவைச் சூடி, குந்தன் நெற்றிச்சுட்டி மற்றும் வளையல்களுடன் தனது தோற்றத்தை நிறைவு செய்திருந்தார். அவரது கணவர் நிக் ஜோனஸ் கிரீம் மற்றும் வெள்ளை நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தா அணிந்திருந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வின்னி ஹார்லோ உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, பிரியங்கா சோப்ராவின் தீபாவளிக் கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசித்தாலும், தனது நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களுடன் இணைந்து இந்தியப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
IIFA விருது விழாவில் 12 விருதுகளை வாரிக் குவித்த ‘துரந்தர்’: முழு வெற்றியாளர்கள் பட்டியல்!
