
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்தியத் திரையுலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையையைப் படைத்துள்ளது.
வரலாற்றுச் சாதனை படைத்த உரிமை ஒப்பந்தம்
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டுத் திரையரங்கு விநியோக உரிமையை (Overseas Theatrical Rights) பிரபல விநியோக நிறுவனமான ‘பார்ஸ் ஃபிலிம்ஸ்’ (Phars Films) கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை சுமார் ரூ. 175 கோடிக்கு (Minimum Guarantee) விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.100 கோடியைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக விலைக்கு விநியோக உரிமை விற்பனையான இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘கிங்’ பெற்றுள்ளது.


நட்சத்திரப் பட்டாளம் மற்றும் எதிர்பார்ப்பு
ஷாருக்கானுடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘பதான்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஷாருக் கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணியில் வெளியாகும் இரண்டாவது படம் என்பதாலும், சர்வதேச அளவில் ஷாருக்கானுக்கு இருக்கும் மாபெரும் சந்தை மதிப்பு காரணமாகவும் இப்படத்திற்கு உலகளாவிய விநியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியீடு
பிரம்மாண்ட அதிரடித் திரைப்படமாகத் தயாராகி வரும் ‘கிங்’, 2026-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்பே படைக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச சாதனை, பாலிவுட் திரையுலகிலும் உலகளாவிய சினிமா சந்தையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
