மத இன மோதலை தடுக்க அரசு இறுதி வரை உறுதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியெனவும், சங்கிகளை தவிர்த்து ஆன்மீகவாதிகள் இறையன்பர்கள் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளாா்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 1.50 கோடி ரூபாய் செலவில் 602 மூத்த குடிமக்கள் இராமேசுவரம், காசி ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டனர். பயணத்தில் பங்கேற்ற 602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப்பைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, ஆன்மீக ரயில் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது, சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை, சனாதானம் அல்ல இறைகொள்கை எனவும் இது ராமானுஜர் வாழ்ந்த மண் எனவும் வடக்கில் இது போன்ற விரும்பதாக சூழலை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போல் தமிழகத்தில் ஏற்படுத்த பார்க்கிறார்கள் எனவும் பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, மரத்திற்கு மரம் தாவும் குரங்கு அல்ல நாங்கள் எதிர்த்து நிற்கின்ற சிங்கத்தின் கர்ஜுனையோடு இருக்கின்ற முதல்வர் தலைமையில் பயணிக்க கூடிய இயக்கம் இது. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சூழலை உருவாக்க பார்த்தார்கள். அதை தான் எதிர்பார்த்தார்கள் நடத்தவில்லை நடக்க விடாமல் சக்கரவியூகத்தை உருவாக்கியவர் எங்கள் முதல்வர் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை மலை மீது 350 ஆண்டுக்கு முன்னர் வரை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அங்கு சென்று நான் ஐந்து இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என சொல்வது எப்படியோ அது போல தான் திருப்பரங்குன்றம் விவகாரம் என கூறினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 66 கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதில் சுமார் ஒரு கோடி பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவண்ணாமலையை பொருத்தவரை 35 லட்சம் மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் 1920 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருகிறது. 1996 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்றக்கூடிய தீபம் வழக்கமான இடத்திலேயே ஏற்ற வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அதே தீர்ப்பை 2014 ஆம் ஆண்டும் உறுதி செய்தார்கள். மேல்முறையீட்டு மனு 2017 ஆண்டு மீண்டும் தனி நீதிபதி உத்தரவை கல்யாண சுந்தரம் பவானி என்ற இரு நீதிபதிகள் மீண்டும் அந்த தீர்ப்பை 100 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்றப்பட்ட இடத்திலே ஏற்றபட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த அரசை பொருத்தவரை சட்டத்தை மதிக்க கூடிய அரசு நீதிமன்றம் தீர்ப்பை ஏற்கனவே என்ன உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது அந்த உத்தரவை செயல்படுத்தி சட்டத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாமல் நடந்துகொள்கிறோம். அதிமுக இதனை எதிர்த்து வருவது குறித்தான கேள்விக்கு, அதிமுகவில் அம்மையார் இருந்தபோது அப்போது எடுத்த நிலைப்பாடுகள் சுதேசி இயக்கத்தில் எடுத்து வந்தது போல் இருந்தது. இப்போது எடுக்கின்ற நிலைப்பாடு டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதற்கு ஏற்ற நிலைப்பாடு தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொண்ட கொள்கைகள் லட்சியங்கள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு கொண்டிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலே பார்த்தால் 2014 – 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி தான் இருந்தது இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதை மறந்துவிட்டு இரண்டாம் இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன் வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது கொள்கைக்கு கோட்பாடு லட்சியங்களை பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள் என விமர்சனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் கருத்து தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, அது குறித்து அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என சேகர்பாபு தெரிவித்தார். 2014 இல் வழங்கப்பட்ட தீர்ப்பையே இறுதி தீர்ப்பாக எடுத்து தொடர்ந்து அரசு செயல்படுமா என்ற கேள்விக்கு, சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளது இறுதிவரை அரசு மத இன மோதலை தடுக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என கூறினார். மத மோதல்களை ஏற்படுத்த நீதிபதிகளை பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் போராட்டங்களில் பங்கெடுங்காமல் வழக்கம் போல் கடைகளை திறந்து இருந்தனர் என்ற கேள்விக்கு, மக்கள் தெளிவாக உள்ளனர். கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. கிரிவலம் வழக்கம் போல் சென்றனர். கோயில்களுக்கு பக்தர்கள் வழக்கமாக சென்று வருகிறார்கள் என தெரிவித்தார். இந்த அரசு சட்டத்தை மதிக்கும் அரசு, பக்தர்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. சங்கிகளை தவிர்த்து ஆன்மீகவாதிகள் இறையன்பர்கள் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


