அறிவழகன் கைவல்யம்
சில நாட்களுக்கு முன்னதாக திருப்பரங்குன்றம் சென்று வந்தேன். புதிதாகப் போடப்பட்டிருக்கும் படிகள் தெரியாது என்பதால் காட்டுப் பாதையில் தடம் மாறினேன். வாயிலில் இருந்த காவலர் எங்கே எதற்காகப் போகிறேன் என்று கேட்டார்.
“நான் சும்மாதான் சார் போகிறேன், சுற்றிப் பார்ப்பதற்கு…கூடவே நான் ஓர் எழுத்தாளன் சார், பயணங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்ட, அவை குறித்து எழுதுகிறவன்” என்றேன்.

என்ன நினைத்தாரோ எழுந்து கைகளைக் குலுக்கினார். பிறகு அவரது அலைபேசி எண்ணையும் எனக்குக் கொடுத்தார். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை நீங்கள் அழைக்கலாம் சார் என்றார்.
உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் பின்னால் இருக்கும் தீப மண்டபத்தின் அருகில் நின்று சில நிழற்படங்கள் எடுத்துக் கொண்டேன். வழக்கமாக அறுபடை வீடுகளிலும் எப்படியான காட்சி அனுபவம் கிடைக்குமோ அதே காட்சி அனுபவமும், மன அமைதியும் அங்கும் கிடைத்தது.
மனிதர்களின் தடம் எதுவுமே இல்லை, அநேகமாக அவசர உதவிக்குக் கூட யாரும் வரும் வாய்ப்பில்லை. அங்கிருந்து சில நிமிடங்களில் ஒரு பூட்டப்பட்ட கோவில் இருந்தது. ஏறத்தாழ சங்கந்திடல் ஐயனார் கோவிலைப் போல ஆழமான அமைதி, சில பறவைகளும், அணில்களும் மட்டும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருந்தன.
படிகளும் இல்லாத, சரியான பாதையும் இல்லாத குன்றின் பாறைகளில் கால் வழுக்கி இடறும் வாய்ப்பு நிறைய இருந்தது. இரண்டு போத்தல்களில் நீர் இருந்தது. வெள்ளரிப்பிஞ்சுகளும், கொய்யாக்காய்களும் வைத்திருந்தேன்.
இடையில் ஒரு சிறிய இஸ்லாமிய சடங்குகள் செய்யும் (கந்திரி) பகுதியும், சுனை ஒன்றும் இருந்தது. பாறைகளின் மீது கற்களை அடுக்கி அடுக்கி வைத்திருந்தார்கள். அது போல திபெத்திய எல்லைகளில் இருக்கும் நீர் நிலைகளில் பார்த்திருக்கிறேன்.
கொஞ்சம் தொலைவில் புதிய படிக்கட்டுப் பாதை தென்பட்டது, பெரியதொரு சுனையும், மரங்களுமாக பரங்குன்றம் அழகாக இருந்தது. படிகளில் ஏறிக் கொஞ்ச நேரத்தில் சமதளம் வந்துவிட்டது. அங்கிருந்து மனிதர்கள் தென் படத் துவங்கினார்கள்.
மனிதர்களை விட இருமடங்கு குரங்குகள், முதலில் ஒரு பெரிய குரங்கு என் கையில் இருந்த தண்ணீர்ப் போத்தலைப் பிடுங்கிக் கொண்டு விட்டது. பிறகு விடாமல் என்னைச் சுற்றி ஒரு பட்டாளமே பின்தொடரத் துவங்கியது. குரங்குகளின் மீது எப்போதும் எனக்கு முரண்கள் கிடையாது.
அதில் ஒரு குரங்கு இவன் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்ததோ என்னவோ? இடுப்பில் ஏறி அமர்ந்து சரியாக எனது கால்சட்டைப் பைக்குள் கையை விட்டு வெள்ளரிப் பிஞ்சை எடுத்துக் கொண்டு விட்டது. நானே கொடுக்கிறேன். கீழே இறங்கு என்ற எனது கோரிக்கையை அது கண்டு கொள்ளவே இல்லை.
மலையின் உச்சியில் ஒரு காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. நாட்டார் வழிபாடு போலவே பிராமணர்கள் இல்லாத உள்ளூர் பூசாரிகள் நல்ல தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி தீபமேற்றுகிறார்கள்.வழக்கமாக பிற கோவில்களில் குறிப்பாக பிராமணப் பூசாரிகள் இருக்கும் பெரிய நிறுவன மயமாக்கப்பட்ட கோவில்களில் நிகழும் அழிச்சாட்டியங்கள் ஏதுமில்லை. கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தருவது… அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கூழைக் கும்பிடு போடுவது, எளிய மக்களை கடவுளின் பெயரில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு ஒருமையில் பேசுவது போன்ற எந்த தெய்வீகத் தன்மையும் இல்லாமல் மக்களுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதையும் அங்கிருக்கும் வயதான பூசாரியும், இளைஞரும் சொல்கிறார்கள்.

கூடவே கோவிலின் படியில் மகளின் வயதை ஒத்த பெண் குழந்தை ஒருத்தி என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டாள். ஏன் என்று தெரியவில்லை. அவளது கால்களுக்கு அருகில் ஒரு பெரிய எலி செல்வதைப் பார்த்து அதிர்ந்து போய் என் பக்கமாக இழுத்துக் கொண்டேன்.
ஆனால், அது அந்த எலியைப் பார்த்து நான்தான் பயந்திருக்கிறேன் போல, அவன் இடது காலால் எலியின் வயிற்றை நெம்பித் தள்ளி விட்டு சிரித்தாள். பிறகு என்னை ஒரு பயந்தாங்கொள்ளி என்று நினைத்திருப்பாளோ என்னவோ?
நான்கு பிரசாதங்களை வாங்கித் தருவதில் இருந்து நக்கீரர் சுனையில் இருக்கும் படம் வரை அழைத்துப் போனாள். அங்கிருக்கும் வரை அவள்மீது இனம் புரியாத ஆழமான அன்பு படர்ந்திருந்தது.
நீண்ட நேரம் அங்கிருந்து விட்டு மறுபடி அந்தப் பழைய பாதையிலேயே இறங்கி வந்தேன். இப்போது ஏறத்தாழ 10 பேர் வரை என்னோடு இறங்கினார்கள். வரும்போது அந்தக் காவலர் அங்கில்லை. மேசையும், நாற்காலியும், குறிப்புகள் ஏற்றும் நோட்டுப் புத்தகமும் இருந்தது. நேரம் குறித்து விட்டு கையெழுத்துப் போட்டு நடந்தேன்.
கோவிலுக்கு எதிர்ப்புறம் இருந்த ஒரு தேநீர்க் கடையில் இளம் ஜெர்மானிய இணை ஒன்று நமது தேநீரை அற்புதமாக உரையாடியபடி குடித்துக் கொண்டிருந்தார்கள். காட்டுப் பாதையில் நடக்கும் போதே நிறைய இஸ்லாமிய வீடுகளும், புர்கா அணிந்த பெண்களும் தென் பட்டார்கள்.
திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எந்த ஒரு முரண்பாடுகளும் இல்லை. வழக்கமாக நிகழும் கந்திரி விழாக்களில் (ஆடு வெட்டி சமைத்து குடும்பத்தினரோடு விருந்துண்ணுவது) பெருமளவில் கிடாயைக் காலி செய்வது இஸ்லாமியரல்லாதவர்கள் தான். அதாவது So Called இல்லாத தமிழர்கள் (இந்துக்கள் என்று திரிக்கப்பட்டவர்கள்).
நானே பலமுறை பிரான்மலை கந்திரி விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஏம்பல் சந்தனக்கூடு விழாக்களில் இரவு நேரம் முழுவதும் மரத்தடியில் உறங்கி தாகாவிற்குள் சென்று முழு சுதந்திரத்தோடு சாப்பிட்டு அரட்டையடித்தபடி வாழ்வை அனுபவித்திருக்கிறேன்.
இப்போதும் வீட்டுக்கு அருகில் நாங்கள் ஐந்தாறு குடும்பங்கள் வாழ்கிறோம். நான்கு பேர் இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்கள், ஒருவர் நாட்டார் வழிபாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர், எங்கள் குடும்பம் தீவிர நாத்திகக் குடும்பம்.
நான் மட்டும் எந்த உள்ளீடுகளும் அற்றவன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிறரது நம்பிக்கைகளை ஒருபோதும் ஏளனம் செய்வதோ இல்லை எதிர்ப்பதோ எனது இயல்புமல்ல.
நான் எல்லா மதங்களிலும் இருந்து சிறந்த வற்றைப் பெற்றுக் கொள்பவன். இந்த உயர் பண்பை நான் வாழும் சமூகத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். வேறெங்குமல்ல, இப்போது மகளுக்கும் இந்த நிலைப்பாடு பிடித்திருக்கிறது.
Being compatible for fellow life is comfortably better than stubbornness into any Religious or Racial ideologies.
திருப்பரங்குன்றத்தில் நான் நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். தமிழர்கள், ஜெர்மானியர்கள், இஸ்லாமியர்கள் என்று பலதரப்பு. என்னைக் கேட்டால் திருப்பரங்குன்றத்தில் அல்லது மதுரை, சிவகங்கை சுற்றுப் பகுதியில் வாழும் யாரையும் இஸ்லாமியர்கள் என்றோ பாய் என்றோ குறிப்பிடுவதையோ கூட நான் விரும்புவதில்லை.
அவர்களை நாம் வழக்கமாக உறவுகளோடு தான் அழைத்திருக்கிறோம். அத்தா, அம்மா, தம்பி, அண்ணன் என்று.. அவர்கள் நமது நாட்டார் வழிபாடுகளில் பங்கு கொள்வதும், இயல்பானது.
நாங்கள் அவர்களது பண்பாட்டு விழாக்கள் மட்டுமல்லாமல் குடும்ப விழாக்களின் அழைப் பிதழ்கள் வரை பரஸ்பரம் பெரியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அச்சிடுவது வழக்கம்.
இந்து முன்னணி, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற சமூக விரோதிகள் அதிகாரத்திற்கு வந்த பிறகுதான்; இந்தத் தமிழர் இஸ்லாமியர் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் சிந்தனைக் களம் தமிழகத்தில் உருவாக்கப்பட முயற்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றமோ, தென் தமிழகமோ ஒரு போதும் இந்த அடிப்படைவாத இந்துத்துவ சமூக விரோதிகள் கும்பலை ஏற்றுக் கொள்ளாது. ஜி.ஆர்.சுவாமிநாதன்கள்தான் பெரியார் என்கிற மனிதரால் ஆப்படிக்கப்பட்ட குரங்குகள்.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத பிராமணீயத்தின் போலி அடுக்கை, அகந்தையை நகைச்சுவையாக அதாவது அவர்களின் அதிகார மையத்தை காமெடிப்பீசாக மாற்றி விட்டவர் அந்தக் கிழவர்.
தமிழகத்தில் இழந்து போன அந்தப் பழைய நினைவுகளை எப்படியாவது மீட்டெடுத்து மீண்டும் ஒரு சனாதனக் கனவை நோக்கி தமிழகத்தை நகர்த்த முடியுமா என்ற இந்துத்துவர்களின் முயற்சியில் தான் ஜி.ஆர்.சுவாமி நாதன் போன்ற அதிகார வெறிகொண்ட நீதிபதிகளும், ஆர்.என்.ரவி போன்ற நீதிக்குப் புறம்பான கவர்னர்களும் இங்கே முளைத்து வருகிறார்கள்.
ஆனால், அன்புக்குரிய இந்துத்துவ அடிப்படைவாதிகளே, இந்த நிகழ்வை மட்டும் இறுதியாக ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள். கார்த்திகை நாளன்று மதுரையில் இருந்தேன்.
சிம்மக்கல்லில் அலுவலகத்துக்குத் தேவையான கணிப்பலகை (Tablet) மற்றும் வெப்பச்சுப் பொறி (Thermal Printer) வாங்குவதற்கு சுற்றித் திரிகையில் மகிழுந்தை ஆதி சொக்கநாதர் கோவிலுக்குப் பக்கத்தில் நிறுத்திய ஓட்டுனர் எதிரில் இருக்கும் கடையைக் காட்டினார்.
சாலை மற்றும் தெருக்களில் போகும் வழியெல்லாம் தீபங்கள் ஏற்றப்பட்டு நகரே அழகிய விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆதி சொக்கநாதர் ஆலயத்தை அடைத்தபடி தேரில் பவனி வருகிற தோழர் சிவனும், மீனாட்சியும் சாலையை அடைத்திருக்க நான் கடக்கும் போது சரியாக என்னிடத்தில் ஆரத்தித் தட்டை வந்து தீட்டினார் ஓர் இளைஞர்.
நான் மறுப்பதில்லை. ஏற்றுக் கொண்டேன். கையில் தட்டில் இருந்து திருநீற்றை அள்ளிக் கொடுத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார் அந்த இளைஞர். கையில் இருந்த அந்தத் திருநீறை ஏந்தியபடி நடந்து கொண்டிருந்தேன்.
கோவிலுக்கு அடுத்தபடியாக நான்கைந்து கடைகள், அனைத்தும் இஸ்லாமிய உறவுகள் நடத்துகிற கடைகள். இரண்டாவது கடையில் இருந்த புர்கா அணியாத ஓர் இஸ்லாமியத் தாய் என்னை ஏதோ வாங்கிக் கொண்டு செல்வதற்கு அழைப்பது போலிருந்தது.
அது ஒரு கைப்பைகள் விற்கும் கடை, நான் கடையில் இருக்கும் பொருட்களை வாங்கத்தான் அழைக்கிறார்கள் என்று தவறாக எண்ணியபடி கையை உயர்த்தி வேண்டாம் என்றபடி நடக்கத் துவங்கினேன்.
நான்கைந்து அடிகள் எடுத்து வைத்தவனுக்கு ஏதோ பொறி தட்டியது. திரும்பிப் பார்த்தவன் அவர்கள் என் கையில் இருக்கும் திருநீறை எடுத்துச் செல்ல ஒரு சிறு துணியால் ஆன பையைக் கொடுப்பதற்கு அழைத்திருக்கிறார்கள்.
உடனடியாக அந்த அம்மாவிடம் சென்று பையை வாங்கி அதில் திருநீறைப் போட்டுக் கொண்டேன். அவர்களிடம் நான் நீங்கள் ஏதோ பையை விற்பனை செய்வதற்காக என்னை அழைப்பதாகத் தவறாகப் புரிந்து கொண்டேன் அம்மா. மன்னியுங்கள் என்றேன்.
“தம்பி, வேண்டாம் என்று நீ கையை உயர்த்திச் சொன்னது எனக்குச் சங்கடமாகப் போய் விட்டது. நாங்கள் சில ஆண்டுகளாகவே இதை ஒரு கடமை போல் செய்கிறோம், இன்ஷா அல்லாஹ், நீயும் என் மகன் தானே…”
எனக்கு கண நேரத்தில் கண்கள் கலங்கி விட்டது. இன்னொரு நாள் வருகிறேன் அம்மா என்று விடைபெற்றேன். உறுதியாக இன்னொரு நாளில் போவேன். அந்த உறவை மேம்படுத்துவேன். இதுதான் மதுரை. இதுதான் திருப்பரங்குன்றம்.

இதைத்தாண்டி இங்கு மதத்தின் பெயரைச் சொல்லியபடி சுற்றித் திரியும் எவரும் சமூக விரோதிகள் தான். அது ஜி.ஆர்.சுவாமிநாதனாகட்டும், ஆர்.என் ரவியாகட்டும்..சமூக விரோதிகளை பிறகு வேறெப்படி அழைப்பது?
அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

