spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅயோத்தியும் - திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

-

- Advertisement -

மருதையன்

அயோத்தியும் - திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

நீதி வழங்கும்போது, “அண்ணன் தம்பி” என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, “மனுதாரர் சங்கியா” என்று மட்டுமே பார்த்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார். இதைவிட, மேலும் அந்தத் தீர்ப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

we-r-hiring

“திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்” என்று ஹெச். ராஜா பேசினார். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதன் பிறகு, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆதரித்துப் பேசியுள்ளார். அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தவெகவும் அதன் தலைவரும் கள்ள மவுனம் சாதித்து ஆதரிக்கின்றனர். 1990களுக்கு முன்னிருந்த வெளிப்படையாக முஸ்லிம் வெறுப்பைப் பேசுவதில் இருந்த தயக்கம் இப்போது பலருக்கும் இல்லை. இது மிகவும் மோசமான போக்கு.

இங்குள்ள பலர் அயோத்தி சிக்கல் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்; சிலருக்கு இதுபற்றித் தெரியாமல் இருக்கலாம்.

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி பிரச்சனை நீண்ட வரலாறு கொண்டது. அயோத்தியில், பாபர் மசூதியின் மையக் குவிமாடத்துக்குக் கீழ்தான் ராமர் பிறந்ததாக நம்பிக்கை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, மசூதியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அப்போது, பலர் சமரசத் தீர்வுகளைப் பரிந் துரைத்தனர். அருகிலேயே கோயில் கட்டலாமே, இரண்டு தரப்பாரும் சமாதானமாக வாழலாமே, இடிக்க வேண்டாமே என்றும் பேசினார்கள். “இங்குதான் ராமர் பிறந்தார்” என்று கூறும் ஆதாரங்கள் போதுமானதா என்ற கேள்வியும்கூட எழுப்பப்பட்டது. அயோத்தியிலேயே அன்று சுமார் 15 இடங்களில் இங்குதான் ராமர் பிறந்தார்” என்று கூறி நிதி வசூல் செய்த மடங்களும் இருந்தன.

“மத்திர் வஹீ பனேங்கே’ (கோயிலை அங்கே தான் கட்டுவோம்) என்று அன்று கூறியது போல, “தீபம் அங்கேதான் ஏற்றுவோம்” என்ற முழக்கம் எழுப்பப்படுகின்றது. இதுதான் முக்கியமான சிக்கல் புள்ளி. இது தமிழ்நாட்டில் நடக்குமா? இதுவரை ‘நடக்காது’ என்றே கருதியிருந்தோம். ஆனால், இப்போது அப்படி அவட்சியமாக இருப்பதற்கில்லை என்பதை நடைபெற்று வரும் நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.

பாபர் மசூதி பிரச்சனை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி, 1980களின் பிற்பகுதியில் ‘ரதயாத்திரை’ மூலம் தீவிரமடைந்து, 1992இல் மசூதி இடிக்கப்பட்டு, இப்போது மோடி ஆட்சியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகள் எடுத்துக்கொண்ட இந்தப் பிரச்சனை, இப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதி பரிபாலனத்தில், பத்தேநாளில் முடிக்கிறேன்” என்று முன்வைக்கப்படுகிறது. 10 நாளுக்குள் விசாரித்து முடிக்கும் வேகத்தில் திருப்பரங்குன்றம் வழக்கைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். அயோத்திக்கும் திருப்பரங் குன்றத்துக்கும் இடையே பொருத்தப்பாடுகள் பல உள்ளன.

அயோத்தியும் - திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு: அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றங்கள் மட்டு மல்லாமல், பெருமளவில் மக்களைத் திரட்டி, அரசு, கட்சிகள், நீதிமன்றம் ஆகிய அனைத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரை, மக்களைத் திரட்டி, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் இதைச் சாதிக்க முடியவில்லை; தேர்தலில் வெற்றி பெற்றும் சாதிக்க முடியவில்லை; ஒரு பொதுக் கருத்தையும் உருவாக்க முடியவில்லை. எனவே, எதைப் பயன்படுத்துகிறார்கள்? நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை முடக்க, தேர்ந்தெடுக்கப்படாத நீதிமன்றத்தைப் பயன் படுத்துகிறார்கள். இது, அருண் ஜேட்லி சொன்னதுபோல, “தேர்நதெடுக்கப்படாதவர்களின் சர்வாதிகாரம்’ ஆகும்.

இப்போது திருப்பரங்குன்றத்தை ஏன் அயோத்தியுடன் ஒப்பிட வேண்டும்? நமது நாட்டில் கட்சிகள், முக்கிய நீதிமன்றங்கள் எப்படி இயங்கி வந்துள்ளன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டு முறைகள் என்ன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகவே, அயோத்தியை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

அயோத்தியில் பிரச்சனை 1853இல் தொடங்கியது. 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்கு சில ஆண்டுகள் முன்பு, “இங்குதான் ராமர் பிறந்தார்” என்ற விவாதம் ஒரு சிறு கலவரத்தை உண்டாக்கியது. 1857இல் நவாப் ஆட்சி நிலவியது அப்போது மசூதி கட்டடத்துக்கு வெளியே, ஆனால் மசூதி வளாகத்திற்குள் ராம் சபுத்ரா ஒரு சிறு மேடை கட்டப்பட்டது. அவத் சமஸ்தானத்தின நவாப் அதை இடிக்க உத்தரவிடவில்ல.. முஸ்லிம் – இந்து தரப்புக் கிடையே, நீங்கள் இந்தப் பக்கத்தில் கும்பிட்டுக் கொள்ளுங்கள்; அவர்கள் அந்தப் பக்கம் வந்து தொழுகை நடத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரு பஞ்சாயத்து செய்தார்.

அயோத்தி, அவுத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வாரிசு இல்லாத சுதேச அரசுகளை எடுத்துக் கொள்ளும் கொள்கையில் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினர். நவாப் சரணடைந்த போதும், அவரது அந்தப்புரத்தைச் சேர்ந்த ஒரு விவசாயப் பெண் (ஹஸ்ரத் பேகம்) தனது மகனுக்கான உரிமையைப் பாதுகாக்கப் போராடினார். கடைசிவரை சரணடையாமல், நேபாளக் காடுகளில் தலைமறைவாக வாழ்ந்து, அநாதையாக இறந்தார். இந்த அவுத் சமஸ்தானம் இந்து முஸ்லிம் இணைந்த பண்பாடு (கங்காஜமுனா தெஹ்ஸீப்) வளர்ந்த இடமாக இருந்தது.

1885இல், மகந்த ரகுபர்தாஸ் என்ற அந்தக் கோயில் அர்ச்சகர், அந்த மேடையில் கோயில் கட்ட அனுமதி கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சப் ஜட்ஜ் ஹரி கிருஷ்ண சிங், “கோயில் கட்டுவது சமூக மோதலுக்கு வழிவகுக்கும்” எனக் கூறி நிராகரித்தார். மேல் முறையீட்டை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜெ.இ.ஏ.சேம்பர், அயோத்தியை இந்துக்கள் தமது புனித இடமாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கே இந்த மசூதி கட்டப்பட்டு 356 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரலாற்றைத் திருத்தியமைக்க முடியாது. தற்போதுள்ள நிலைமையை அப்படியே பராமரிக்கலாம்” என்று கூறி மசூதிக்கும் ராம் சபுத்ரா மேடைக்கும் இடையே ஒரு வேலி அமைக்க உத்தரவிட்டார்.அயோத்தியும் - திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

1934இல், முஸ்லிம்கள் பசுவைக் கொன்று விட்டனர் என்று கூறி தொடங்கிய ஒரு கலவரத்தைத் தொடர்ந்து, மசூதி தாக்கப்பட்டு சிறு சேதம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசு குற்றவாளிகளைக் கைது செய்து, தண்டத்தொகை வசூலித்து மகுதியைச் சீரமைத்தது.

1947 சுதந்திரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து மதக்கலவரங்கள் நாடெங்கும் நடந்தன. இதே சூழலில், 1949 டிசம்பரில், பாபர் மசூதிக்குள் ராமர் சிலை திடீரெனத் தோன்றியதாக ஒரு செய்தி பரவியது. பிரதமர் நேரு, உத்தரப்பிரதேச முதல்வர் கோவிந்த வல்லப பந்த்திடம் அந்தச் சிலையை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். ஆனால், முதல்வரும், மாவட்ட ஆட்சியர் (கலெகடர்) கே.கே.நாயரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அதை நிறைவேற்ற மறுத்தனர். காங்கிரசுக்குள்ளேயே இந்துமகாசபா, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சக்திகள் இருந்தனர். ஆகையால், இடத்தை மூடிவிட்டு, ‘ஸ்டேட்டஸ் கோ’ (நடப்பு நிலைமையைப் பேணுதல்) என்று விட்டுவிட்டார்கள். இதனால் முஸ்லிம்கள் மசூதியில் தொழுகை நடத்த முடியாத நிலை உருவானது.

1950இல், கோபால் சிங் விஸாரத் என்பவர், “எனக்கு வழிபாடு செய்ய உரிமை வேண்டும்” என்று வழக்குத் தொடுத்து, ராமன் சிலைக்கு வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றார். மேலும், சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்னும் தடை உத்தரவையும் சிவில் நீதி மன்றத்தில் பெற்றார்.

அடுத்து 1959இல், நிர்மோகி அக்காரா என்ற மடத்தின் பிரதிநிதிகள், “ராமன் பிறந்த இடத்தின் காப்பாளர் நாங்கள்தான் என்பதால் இந்த இடம் எங்களுக்கே சொந்தம்” என்று வழக்கு தொடுத்தனர்.

1961ல், இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியம், மசூதியும் அதைச் சுற்றியுள்ள இடமும் எங்களுக்குச் சொந்தம்” என்று உரிமை வழக்கு தொடுத்தது.

1986இல், உமேஷ் சந்திர பாண்டே என்பவர், பூட்டப்பட்டிருந்த இடத்தைத் திறக்க வேண்டும் என்று ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை ஜனவரி 31, 1986 அன்று விசாரித்த மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, 1986 பிப்ரவரி 1 அன்றே அந்த இடத்தை எல்லா பக்தர்களுக்கும் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில், மசூதியின் உரிமையாளர்களும் எதிர்மனுதாரருமான வக்ஃப் வாரியத்திற்கு தோட்டீஸே கொடுக்கப்படவில்லை.

பாண்டே தீர்ப்பளிப்பதற்கு வெகுநேரம் முன்னரே பக்தர்கள் என்றபெயரில் ஆயிரக்கணக்கானோர் மசூதி முன் குவிக்கப்பட்டிருந்தனர். கதவு திறக்கப்பட்டது. போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கியிருந்த ராஜீவ் அரசு, இந்துக்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்த நிகழ்வைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததாக, பிரதமர் ராஜீவ் காந்தியின் உறவினரும் அன்றைய அமைச்சருமான அருண் நேரு பின்னாளில் ஒரு பத்திரிகையில் எழுதினார்.

திருப்பரங்குன்றம் – ஒரு சிறு பயணம்

இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி பாண்டே, தீர்ப்பு வழங்கிய நாளன்று நீதிமன்றக் கூரையின் மீதும், பிறகு தனது வீட்டின் மீதும் ஒரு குரங்கு அமர்ந்திருந்ததைக் குறிப்பிட்டு, இத்தீர்ப்பே ஒரு தெய்வச்செயல்” என்பதுபோல சித்தரிக்கிறார். இதையும், இதன் பின் வழங்கப்பட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் பற்றி “ராமன் தொடுத்த வழக்கு. குரங்கு எழுதிய தீர்ப்பு” என்ற தலைப்பில் புதிய கலாச்சாரம் இதழில் 2010இல் ஒரு கட்டுரையாக நான் எழுதியுள்ளேன்.

1989இல், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான தேவகி நந்தன் அகர்வால், “நான் ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) காப்பாளர்” என்று கூறி இந்த வழக்கில் சேர்ந்து கொள்கிறார். அதே ஆண்டில், விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு உச்ச நீதிமன்றம் அடிக்கல் நாட்ட அனுமதி அளித்தது. அவர்கள் ராம் சபுத்ராவில் அடிக்கல் நாட்டுவதாகச் சொல்லிவிட்டு, மசூதிக்குச் சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்டினர். இது மீண்டும் ‘ஸ்டேட்டஸ் கோ’வை மாற்றியது.

1990இல், மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கத்தை எதிர்த்து, எல்.கே. அத்வானி ‘ரதயாத்திரை’ தொடங்கினார். யாத்திரை இந்தியா முழுவதும் மதக் கலவரங்களைத் தூண்டியது. இதன் உச்சமாக, 1992 டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அப்போதைய முதல்வர் கல்யாண் சிங், உச்ச நீதிமன்றத்தில் மசூதிக்குச் சேதம் ஏதும் வராமல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்திருந்தார். இடிக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் மதக் கலவரங்கள் வெடித்தன; மும்பையில் குறிப்பாகக் கோரமான வன்முறைகள் நடந்தன.

1993இல், கல்யாண்சிங் அரசு, இடிபாடுகளைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. (பின்னாளில் கோயில் கட்டுவதற்குத் தேவை என்று கூறி)

2003இல், உத்தரப்பிரதேச அரசின் ஆணையின் பேரில், மசூதிக்கு அடியில் பாபரால் இடிக்கப்பட்ட கோயில் உள்ளதா என்று கண்டறிய ஒரு தொல்லியல் ஆய்வுக்கு உத்தர விடப்பட்டது. அப்படி எதுவும் நிரூபிக்கப் படவில்லை.

2010இல், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து: 1) ராமலல்லா (தேவகி நந்தன் அகர்வால் பிரதிநிதித்துவம்) 2) நிர்மோகி அக்காரா, 3) சுன்னி வக்ஃப் வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கும் ஒப்படைத்தது. “இந்துக்கள் ராமா் இங்கு பிறந்தார் என்று நம்புகிறார்கள்; அந்த நம்பிக்கையே போதுமானது” என்பது போன்ற கருத்துகளைத் தீர்ப்பில் குறிப்பிட்டது.

அயோத்தியும் - திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் 2011இல் தடை விதித்தது. 2019 நவம்பரில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது. அந்த இடம் முழுவதும் இந்துக்களுக்குச் சொந்தமானது என்றும், ஆனால் மசூதி இடிக்கப்பட்டது சட்ட மீறல் என்றும் கூறி மாற்று 5 ஏக்கர் நிலம் மசூதி கட்டுமானத்திற்கு வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு சரத்து 142 [முழு நீதி வழங்கும் அதிகாரம்) கீழ் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?

2020இல், மசூதி இடித்ததற்கான குற்றவாளி எல்லோரும் விடுவிக்கப்பட்டனர். 2022இல், மசூதி இடிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வழக்குத் தொடுத்தவர் இறந்துவிட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முழு வரலாற்றிலும், ‘ஸ்டேட்டஸ் கோ – நடப்பு நிலைமை படிப்படியாக மாறிக் கொண்டே வந்தது. ராம் சபுத்ரா மேடை → ராமர் சிலை வைப்பு →இடம் மூடப்படுதல் → வழிபாடு உரிமை → இடம் திறக்கப்படுதல் → அடிக்கல் நாட்டல் →  மசூதி இடிப்பு →  தற்காலிகக் கோயில் → இறுதியாகக் கோயில் கட்டி முடித்தல்.

இந்த இயக்கத்தை எதிர்த்த பலர், அயோத்தியில் உள்ள பல மடாதிபதிகள், குறிப்பாக 1981இல் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் லால் தாஸ் போன்றவர்கள், மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். லால் தாஸ் 1993இல் மர்மமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று, இதே மாதிரியான ஒரு முயற்சி திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது. இங்கேயும் ‘மக்கள் ஆதரவை உருவாக்க முடியாததால், ‘நீதிமன்ற அதிகாரம்’ மூலம் முன்னேற்ற முயற்சிக்கப்படுகிறது. இது ஒரு புதிய ‘ஸ்டேட்டஸ் கோ’வை உருவாக்கும் முயற்சியாகும்.

தமிழ்நாட்டில், இந்த முயற்சிக்கு பரவலான மக்கள் ஆதரவு இல்லை என்பது உண்மையே. அதேநேரத்தில், மத நல்லிணக்க சக்திகளின் வலுவான எதிர்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஓர் ஆபத்தான போக்கு.  நமது சமூகம் ஒரு ‘எகோ சாம்பர்’ போல் மாறி வருகிறது. ஒரே மாதிரியான அரசியல் பண்பாட்டு கருத்து உள்ளவர்கள் தங்களுக்குள் மட்டுமே உரையாடி, தமக்குச் சாதகமான கருத்துகளை மட்டுமே காதில் வாங்குகின்றனர். மாற்றுக் கருத்துகளுடன் உரையாடல் குறைந்து வருகிறது.

நீதிமன்றங்கள் நம்பிக்கைக்கு உரியவையாக இல்லை. நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே பிடிப்பானது ‘மக்கள்மன்றம்’ தான். மக்கள்மன்ற ஆதரவு என்றால் வாக்களிப்பது மட்டுமல்ல; வீதிகளில் கருத்தை வெளிப்படுத்துவதும் அதில் அடங்கும். ஆனால், இன்று மதச்சார்பற்ற அல்லது பார்ப்பனிய எதிர்ப்பு அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டும் அமைப்புகள் பலவீனமாக உள்ளன. அவர்கள் பல தளங்களில் ஒருங்கிணைத்து வேலை செய்து வரும் இந்த வேளையில், நாம் களத்திலும் இல்லை. பல தளங்களிலும் ஒருங்கிணைப்பும் இல்லை. ஏனோதானோவென்று, அவரவர் அரசியல் சுயலாபம் சிலவற்றைச் செய்துவருகின்றோம். சுயதிருப்தியைக் கருதி, சிலவற்றை செய்துவருகின்றோம்.

நாம் ஒரு மிகவும் கவலைக்குரிய சூழலில் இருக்கிறோம். அயோத்தியில் உச்ச மன்றத்தின் தீர்ப்பு வந்தபின்னால், முஸ்லிம்கள் விசுவ ஹிந்துபரிஷத்துக்கு அளித்த ஒரு மனுவில், “மகுதியின் இடிபாடுகளை எங்களிடம் ஒப்படையுங்கள்; எங்கள் மத நம்பிக்கைப்படி அவற்றை நாங்கள் காப்பாற்றுகிறோம்” என்று கேட்டிருந்தார்கள். நான் அந்தச் செய்தியைப் படிக்கும்போது கண்ணீர் துளிர்த்தது. நாமும் ஒரு மதச்சார்பற்ற சமூகத்தில் வாழ்ந்த ‘இடிபாடுகளின் மிச்சம்’ போல இருக்கிறோமா? உயிரோடிருக்கும் மிச்சங்களாக இருக்கிறோமா? இந்த நிலை இப்படியே நீடிக்க வேண்டுமா? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

MUST READ